திருச்சியில் இன்று (14.09.2021) பாஜகவின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி கலந்துகொண்டார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு சி.டி. ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “கடந்த 20 ஆண்டுகளில் பிரதமர் மோடி மீது ஒரு லஞ்ச புகார் கூட இல்லை. சிறந்த முறையில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றிவருகிறார். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். திமுகவின் எண்ணம் எப்போதும் மத்திய அரசுக்கு எதிராகவே உள்ளது. எத்தனையோ நல்ல திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்கள் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. திமுக அரசாங்கம் இதை மறைக்க முயற்சி செய்கிறது.
நீட் தேர்வை பொறுத்தவரை, கிராமப்புற மாணவர்கள் 2020இல் அதிகமாக தேர்ச்சி பெற்றனர். ஆனால், எப்போதும் நீட் தேர்வில் மத்திய அரசை குறை கூறவும், எதிர்க்கும் மனநிலையிலுமே உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். தொடர்ந்து எங்களது கட்சியை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும். 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க திமுக அரசு எடுத்த முடிவு ஆபத்தான முடிவு. அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே ஆபத்து” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சீனாவின் அத்துமீறல் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “1962இல் இருந்த இந்தியா போல் தற்போது இல்லை; இந்தியா 2021இல் உள்ளது. இந்தியா தனியாக இல்லை, பல நாடுகளுடன் நட்புறவுடன் உள்ளது, இந்தியா எந்த நிலையையும் சந்திக்கத் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.