இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பொன்பரப்பி வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எந்த ஒரு சமூகத்தையோ, கட்சியையோ விமர்சித்து யாரும் பேசவில்லை. நானும் பேசவில்லை.
ஆனால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்நோக்கத்தோடு அறிக்கை வெளியிட்டு, அதையே துண்டு பிரசுரமாக மக்களுக்கு வெளியிட்டுள்ளார். ராமதாஸ் குறிப்பிட்டது போல நான் அவ்வாறு பேசி இருந்தால் நான் அரசியலை விட்டே விலக தயார். இப்படிப் பேச நான் சார்ந்த கட்சி அனுமதிக்காது.
ஆயிரக்கணக்கானோர் என் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுகின்றனர். தினமும் எனது போனில் அறிமுகம் இல்லாத நபர்கள் அவதூறான வார்த்தையில் பேசி திட்டி வருகின்றனர். இது நாகரீக அரசியலுக்கு அழகல்ல.
பாமக மாநிலத் தலைவர் மணி அல்லது முன்னணி நிர்வாகிகள் என்னைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்கலாம். பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ் எனக்கு நெருங்கிய நண்பர் தான் என்னிடம் நேரடியாக விளக்கம் கேட்டால் சொல்ல தயார். இவ்வாறு கூறினார்.