திமுக கோட்டையாகத் திகழும் சென்னை எழும்பூர் தனித் தொகுதி எப்போதும் மிகுந்த பரபரப்பாக இயங்கக் கூடிய தொகுதியாகவே உள்ளது. இதில் பூங்கா நகர், புரசைவாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட தொகுதியில் ரயில்நிலையம் தொடங்கி மாநகராட்சி ரிப்பன் மாளிகை, கமிஷ்னர் அலுவலகம், குழந்தைகள் நல மருத்துவமனை, பள்ளி கல்வி அலுவலகம், மோட்டார் வாகனம் உதிரி பாகம் கிடைக்கும் புதுப்பேட்டை வரையிலும் அனைத்து மாநிலத்தவர்களும் பயன்பெரும் வகையில் இருக்கிறது. இருந்தபோதிலும் இந்த தொகுதிக்கான தேவை இன்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த தேவைகளை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கே எங்களின் ஒட்டு இருக்கும் என்று மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அந்தவகையில் அதிமுக கூட்டணிக் கட்சியில் இடம் பிடித்திருக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனும், திமுக வேட்பாளராக சட்டத்துறை இணைச் செயலாளரான ஐ.பரந்தாமனும், தேமுதிக டி.பிரபும், நாம் தமிழர் கீதாலட்சுமி, மக்கள் நீதி மய்யம் பிரியதர்ஷினி போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் திமுக வேட்பாளரான ஐ.பரந்தாமனிடம் பல கேள்விகளை முன்வைத்தோம்.
திமுக கோட்டையாகச் சொல்லப்படும் எழும்பூர் தொகுதியை மீண்டும் தக்கவைக்குமா திமுக?
நிச்சயமாக அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, இந்த மக்களின் நிறை குறைகளை சென்ற அதிமுக ஆட்சியில் இருந்தபோது தீர்வுகான முடியாமல் போனது. ஆனால் இந்த முறை எங்களுடைய ஆட்சிதான் வரப்போகிறது. அப்போது, இந்த மக்களின் தேவையான குடிநீர்ப் பிரச்சனை, சாலை விரிவாக்கம் மற்றும் வீடுகள் இல்லாமல் தத்தளித்து வரும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்படும். அதேபோல் இப்பகுதியில் வடிகால் வசதி மேம்படுத்தப்பட்டு இருந்தாலும் மழை பெய்தால் கழிவுநீர் ரோட்டில் ஓடும் அவலநிலை இருந்து வருகிறது, அது சரிசெய்து தரப்படும். 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் தமிழ்நாட்டு மார்வாடிகளின் கோரிக்கையான தொழில் செய்யும் வசதி செய்துதரப்படும். அதையும் தாண்டி இந்த மண்ணின் மைந்தன் நான். இத்தொகுதியுள்ள புளியந்தோப்பு சுந்திரபுரம் பகுதியைச் சார்ந்தவன் தான். ஆகையால் இந்த மண்ணின் கஷ்ட நஷ்டங்களை நேரில் அனுபவித்தவன் என்ற வகையில் சொல்கிறேன், இந்த தொகுதியின் நலனில் அக்கறை கொள்வேன். அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இதனால், செல்லும் இடமெல்லாம் மக்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது.
எழும்பூர் தொகுதியை, பதற்றமான வாக்குச்சாவடி என அறிவித்து பாதுகாப்பு வழங்கவேண்டும் எனத் தேர்தல் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதுபற்றி?
2001 தேர்தலின் போது இதே ஜான் பாண்டியன் தான் ஆட்களை இறக்கி பிரச்சனையில் ஈடுபட்டார். அதே போல, தற்போதும் எழும்பூர் தொகுதிக்குள் வெளியூர் ஆட்களை இறக்கி கொண்டு இருக்கிறார். அந்த வகையில் சென்னையில் மேலும் பதற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான், மத்திய பறக்கும் படையிடம் பதற்றமான வாக்குச்சாவடி என அறிவித்து பாதுகாப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். மேலும் மத்தியரசின் கட்டுப்பாட்டில்தான் தற்போதுள்ள தேர்தல் அதிகாரிகளும் செயல்பட்டு வருகிறார்கள். நிச்சியம் அவர்களுக்கு சாதகமாகவும் செயல்படவும் வாய்ப்பு இருக்கும் என்ற காரணத்தாலும் இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
'நான் தலித் அல்ல' என்று சொல்லும் ஜான் பாண்டியன் (எழும்பூர்) தனித் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளது பற்றிய உங்களின் கருத்து?
இந்த மண்ணின் பூர்வக்குடி இந்தச் சமூகக் கட்டமைப்பில் இருக்கும் சனாதனத்தை வேரறுக்க வேண்டும் என்றால் அரசியல் அதிகாரம் மிக முக்கியப் பங்கு வகுக்கிறது. அந்த 'இட ஒதுக்கீடு வேண்டாம்' என்றும், 'நான் தலித்தே இல்லை' என்றும் மார்தட்டிக்கொண்டு பேசும் இவர் ஏன் தனித்தொகுதியில் போட்டியிட வேண்டும். ஏதோ ஒரு பொதுத் தொகுதியில் போட்டியிட வேண்டியதுதானே. பேச்சு ஒன்று செயல் ஒன்று. பணபலம் படைத்த இவருக்கே தனித்தொகுதி தேவைப்படும்போது, அதே சமூகத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வேண்டாம் என்றால், அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகாதா. ஆகவே, இதன் மூலமாகவே தெரிகிறது இவர்களின் அரசியல். இந்தத் தொகுதியில் ஜீப் நுழையாத தெருக்களில் நான் வாக்கு சேகரித்து வருகிறேன். அதே தொகுதியில் இவர் சென்று நான் தலித்தல்ல என்று வாக்கு கேட்டால் இவரின் நிலை அதோகதிதான். இது சென்னை. இங்கு அடிமட்ட ரிக்சா தொழிலாளிக்கும் அரசியல் தெரியும். இவர்களிடம் அவர்களின் ஜம்பம் பலிக்காது.