
விசிக நிர்வாகிகள் யூடியூப் சேனல்களுக்கு தலைமையின் ஆலோசனை இல்லாமல் பேட்டி அளிக்கக்கூடாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முகநூல் நேரலையில் கட்சியினருக்காக அவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கட்சி கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது. வளர்ச்சி அடைய வளர்ச்சி அடைய கட்சிக்குள்ளே முன்னணி தலைவர்களிடையே முதிர்ச்சி வெளிப்பட வேண்டும். கட்டுப்பாடு பிறருக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும். ஆனால் முன்னணி பொறுப்பாளர்கள் சமூக வலைத்தளங்களில் கட்சிக்கும் தலைமைக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையிலே கருத்துக்களை பகிர்ந்து கொள்வது மிகுந்த வேதனையை தருகிறது. வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதை போல் என்பார்களே அதுபோல பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். நம் கட்சி முன்னணி தோழர்களின் அணுகுமுறைகளாலும் காயப்பட வேண்டி இருக்கிறது. வேதனை பட வேண்டி இருக்கிறது. நமக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் அதை சமூக வலைத்தளங்களிலே பகிர்ந்து கொள்ளக்கூடாது, பதிவு செய்யக்கூடாது .
கடந்த 15 ஆண்டுகளாக இதை நான் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறேன். இயக்கத்தின் முன்னணி தோழர்கள் யூடியூப் போன்ற சேனல்களில் யாராவது பேட்டிக்கு அழைத்தால் அந்த சேனல் எத்தகைய பின்னணியை கொண்டது; அதை நடத்துகின்றவர்கள் யார்; என்ன நோக்கத்திற்காக அழைக்கிறார்கள் என்பதையெல்லாம் கணக்கிலே கொள்ளாமல், கருத்தில் கொள்ளாமல் ஏதோ வாய்ப்பு தருகிறார்கள் என்ற அடிப்படையிலே எதையும் சீர்தூக்கிப் பார்க்காமல் இணங்குவது, அதில் பங்கேற்பது, அவர்களின் இடக்கு முடக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லும் நெருக்கடிக்கு ஆளாவது என்பது கவலைக்குரியதாகும்.
சேட்டிலைட் சேனல் என்கின்ற தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி, யூடியூப் சேனல்ஸ் என்கின்ற சமூக வலைத்தளங்களாக இருந்தாலும் அதில் பேட்டி கொடுப்பதற்கு யாரேனும் அழைத்தால் தலைமையிடம் கலந்து பேச வேண்டும். அனுமதி பெற வேண்டும் என்கின்ற ஒரு அணுகுமுறையை இயக்கத் தோழர்கள் பெற வேண்டும். தேர்தல் நெருங்குகின்ற நேரம். கூட்டணி அமைப்பதற்கான உத்திகள் ஒவ்வொரு பெரிய கட்சிகளும் இன்றைக்கு கையாண்டு வருகின்றன. அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு வந்து அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது என்றாலும் கூட இப்பொழுதே தேர்தலுக்கான களம் சூடு பிடித்து விட்டது. இந்த நேரத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆளாளுக்கு யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மனம் போன போக்கில் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். கட்சித் தோழர்களுக்கு இடையேயான முரண்பாடுகளை வெளிப்படையாக பேசுவது அறிவீனமாகும். முதிர்ச்சியின்மையாகும். எனவே இந்த நேரலை வாயிலாக நான் சொல்கின்ற செய்தியை யாருக்கோ செல்கிறார் என்று எண்ணி கடந்து போகாமல் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட சொல்லுகிறார் என்ற உணர்வை நீங்கள் பெற வேண்டும்.
கட்சியின் தலைவர் என்கின்ற முறையில் இதை சொல்ல வேண்டிய ஒரு கட்டாயம் எழுந்துள்ளது. ஒவ்வொரு தனிநபருக்கும் தொடர்பு கொண்டு இதை நான் சொல்லிக் கொண்டிருக்க இயலாது என்பதனால் ஒரு நெருடலோடுதான் இதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாகி இருக்கிறேன். கோபி நாயனார் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி; அதற்கு முன்னதாக அவர் திராவிட கழகத்தை பற்றி பேசிய கருத்து; அதனைத் தொடர்ந்து இன்று நமது கட்சித் தோழர்கள் மனம்போன போக்கில் சொல்லி வருகின்ற கருத்துக்கள் இவை யாவும் கட்சியின் நலன்களுக்கு உகந்தவை அல்ல. தலைமையின் மீதான நன்மதிப்புக்கும் உகந்தவை அல்ல. எனவே யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுக்கும் தோழர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். அல்லது சட்டமன்றத் தேர்தல் முடிகின்ற வரை பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்'' என்றார்.