Skip to main content

மாநில பொறுப்பில் கொங்கு வேளாளருக்கு வாய்ப்பளிக்கப்படுமா? திமுகவில் வலிமையாகும் குரல்!

Published on 05/09/2020 | Edited on 06/09/2020
dddd

 

 

திமுகவின் பொதுக்குழு வருகிற 9-ந்தேதி பரபரப்பாக கூடவிருக்கிறது. கட்சியின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் மூலம் அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை பொதுக்குழுவில் தெரிவிக்கப்படும். மேலும், அவர்களது நியமனத்தை பொதுக்குழு ஏகமனதாக ஏற்று கொண்டதாக அறிவிக்கப்படவிருக்கிறது.

 

இதனையடுத்து, தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் ஆலோசித்து திமுகவின் துணைப் பொதுச்செயலார் உள்பட நியமன பதவிகளில் சிலரை நியமிக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து பல ஆலோசனைகள் நடந்திருக்கின்றன.

 

இந்த நிலையில், மாநில பொறுப்பில் கொங்கு வேளாள கவுண்டர் ஒருவரை நியமித்தால், தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு ஆதரவான கொங்கு கட்டமைப்பை உடைக்க முடியும் என்கிற குரல், கொங்கு மண்டலத்திலிருந்து வலிமையாக எதிரொலிக்கிறது.

 

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "வன்னியர் சமூகத்திற்காக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை தலைவர் ஸ்டாலினிடம் சொல்வதற்கு துரைமுருகனும், முக்குலத்தோர் சமூகத்திற்கு பிரச்சனை எனில் அதனை சொல்வதற்கு டி.ஆர்.பாலுவும், ஐ.பெரியசாமியும் மாநில பொறுப்புகளில் இருக்கின்றனர். வன்னியர், முக்குலத்தோர் போன்று மற்றொரு பெரும்பான்மை சமூகமான கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்துக்கான பிரச்சனைகளை ஸ்டாலினிடம் வலியுறுத்த மாநில பொறுப்பில் யாரும் இல்லை. துணைப்பொதுச்செயலாளராக தற்போது சுப்புலட்சுமி  ஜெகதீசன் இருந்தாலும் அவர் பெண் பிரதிநிதித்துவ அடிப்படையில்தான் இருக்கிறார்.

 

அதனால் துணைப் பொதுச்செயலாளர் நியமனத்தில் கொங்கு வேளாள கவுண்டர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் கொங்கு வேளாளர்களை திமுக பக்கம் ஒருங்கிணைக்கவும், அதிமுகவின் கொங்கு கவுண்டர் வலிமையை உடைக்கவும் இந்த நியமனம் உதவும். கொங்கு வேளாளர்களிடம் நல் மதிப்பைப் பெற்ற திமுக பிரமுகர்கள் யாரும் திமுகவின் மாநில பொறுப்பில் யாரும் இதுவரை நியமிக்கப்படாதது அச்சமூகத்தினரிடம் ஒருவித ஆதங்கமாகவே இருக்கிறது. அதனால், மாநில பொறுப்பில் அச்சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவத்தை ஸ்டாலின் தர வேண்டும்‘’ என்கிறார்கள் கொங்கு மண்டல திமுகவினர்.

 

 

சார்ந்த செய்திகள்