Skip to main content

சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு இணையாக கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டும் முன்னாள் அமைச்சர்

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

 

சேப்பாக்கம் ஸ்டேடியம் மிகப்பெரிய பிரச்சனைக்குள்ளாகி, அதில் போட்டிகள் நடப்பது விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. இதற்கிடையே சேப்பாக்கம் ஸ்டேடியம் அரசுக்கு கட்ட வேண்டிய 2500 கோடி ரூபாயை சலுகைத் தருமாறு எடப்பாடி பழனிசாமி அரசை சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் காவலரான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் வலியுறுத்தி வருகிறார்.

 

 cricket stadium


 

இந்த நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போட்டியாக ஒரு மிகப்பெரிய ஸ்டேடியத்தை திமுகவைச் சேர்ந்தவரும், ஜெகம் புகழும் பெயர்கொண்டவருமான முன்னாள் மத்திய அமைச்சர் பாண்டிச்சேரியில் கட்டி வருகிறார். இந்த ஸ்டேடியம் பல கோடி ரூபாயில் அமைகிறது. 
 

சமீபத்தில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் இவரது கல்லூரிகளில் 360 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பிடிப்பட்டது. அதை சமாளிக்க வருமான வரித்துறையின் முன்னாள் அதிகாரியான முரளி என்கிற பெயர் கொண்ட அதிகாரிக்கு சென்னை தி.நகரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் மூலம் பணம் கொடுத்து சமாளித்தார். 
 

ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் இவரை விடவில்லை. இப்பொழுது சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு இணையாக திமுகவைச் சேர்ந்தவர் ஸ்டேடியம் கட்டுகிறார் என்கிற தகவலை இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகியாக இருக்கக்கூடிய அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். 
 

அவர் ஸ்டேடியம் கட்டினாலும் சென்னைக்கு வரக்கூடிய போட்டிகள் எதையும் பாண்டிச்சேரிக்கு கொடுக்கக்கூடாது என சீனிவாசன் கோரிக்கை வைத்திருக்கிறார். ஜெய்ஷாவும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இந்த தகவலை சொல்லியிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் பாண்டிச்சேரியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மேல் பாய இருக்கிறார்கள் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


 

சார்ந்த செய்திகள்