கோவையில் தொண்டாமுத்துர் பகுதியைச் சேர்ந்தவர் துளசிதாஸ் - மலர்க்கொடி தம்பதி. ஓய்வுபெற்ற மின் ஊழியரான துளசிதாசுக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இவர் மின் ஊழியர் மத்திய அமைப்பின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். அதே போல், ஹார்பர் சங்கத்தை சிஐடியு சங்கத்துடன் இணைத்ததில் துளசிதாசுக்கு பெரும் பங்குண்டு. இவரது மகன்கள் மனவளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் துளசிதாஸ் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் நெருக்கமாக உள்ளார்.
இந்த நிலையில், 40 லட்சம் மதிப்புள்ள தனது அனைத்து சொத்துக்களையும் துளசிதாஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உயிலாக எழுதி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மனைவிக்கும் வயதாகிவிட்டது. அதனால் என்னுடைய ஐந்து குழந்தைகளையும் பார்த்துக்கொள்கிற அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் என நம்புகிறோம். அதில் இரண்டு குழந்தைகளுக்குக் கல்யாணம் முடிந்து நல்லபடியாக உள்ளனர். இப்போது மூன்று குழந்தைகள் மனவளர்ச்சிகுன்றி உள்ளனர்.
அவர்கள் மூன்று பேரையும் பாதுகாப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சியை நம்பி என்னுடைய சொத்து அனைத்தையும் உயிலாக எழுதி வைக்கிறேன். ரொம்ப பெரிய சொத்து என்று எதுவும் கிடையாது. இந்த வீடும் வங்கியில் டெப்பாசிட்டாக இருக்கும் பணமும் மட்டும்தான். வாழ்க்கையின் கடைசி நாட்களில் உறவுகள், அரசு என்பதையும் கடந்து, நேசித்த கட்சி என்னையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுள்ளது” என கூறினார். நேசித்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனது அனைத்து சொத்துக்களையும் துளசிதாஸ் - மலர்க்கொடி தம்பதியினர் எழுதிவைத்திருப்பது கட்சி தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.