நரேந்திர மோடி பிரதமரானால்தான் இந்தியா பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும், நிலையான ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் கே.ஆர்.எஸ்.சரவணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் சேலத்தில் புதன்கிழமை (மார்ச் 20, 2019) நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு, பின்னர் அவர் பேசியது:
இந்தியாவில் பலமான, நிலையான ஆட்சி அமைய எந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு தெரியும். இந்தியா வல்லரசாக மாறி வரும் நிலையில், 130 கோடி மக்களின் பாதுகாப்பும் முக்கியம். நிலையான ஆட்சி, வலிமையான தலைவர் என எல்லா அம்சங்களும் பொருந்திய கட்சி பாஜக மட்டும்தான். அண்டை நாடுகளால் அச்சுறுத்தல் உள்ள நிலையில், பலமான தலைமை அமைய வேண்டும். நாட்டுக்கு உரிய பாதுகாப்பை பாஜவால்தான் தர முடியும். மோடி, பிரதமரானால்தான் நாடு பாதுகாப்பாக இருக்க முடியும்.
சென்னையில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தியை பிரதமர் என்று முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் மாற்றி மாற்றிப் பேசினார். மோடிதான் அடுத்த பிரதமர் என்று ஒருமித்த கருத்துடன் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன. யார் பிரதமர் என்றுகூட சொல்ல முடியாத நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி தலையில்லாத உடல் போல காட்சி அளிக்கிறது.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே எண்ணம் கொண்ட ஆட்சி அமைந்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லும். அதிகாரத்தைக் கைப்பற்ற திமுக எதை வேண்டுமானாலும் செய்யும். 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக, எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக அரசு, 50 ஆண்டு காலமாக நிலவி வந்த காவிரி நதிநீர் பிரச்சனைக்கு உரிய தீர்வினை கண்டிருக்கிறது. அதிமுக கூட்டணி, வெற்றி பெற்றவுடன் காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தும். இதனால் கிடைக்கும் 200 டிஎம்சி தண்ணீர் மூலம் தமிழக விவசாயிகளுக்கு எல்லா காலங்களிலும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.
அதிமுக அரசு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளை தூர்வாரி உள்ளது. எல்லா வகையிலும் தமிழகம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தேவையான நிதியைப்பெற ஒருமித்த கருத்துடன் அதிமுக தலைமையிலான கூட்டணி பாடுபடும். அதிமுக கூட்டணி வெற்றி பெற்றவுடன் சேலத்தில் ராணுவ தளவாட உதிரிபாக தொழிற்சாலை உருவாக்க பாடுபடுவோம். இதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சில சுயநலவாதிகள் அதிமுகவை உடைக்க, ஆட்சியைக் கவிழ்க்க செய்த சதியின் காரணமாக இடைத்தேர்தல் வந்துள்ளது. துரோகம் இழைத்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இக்கூட்டணி இமாலய வெற்றி பெறும். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இக்கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.