விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் உள்ளது எக்கியார் குப்பம். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 16 பேர் அப்பகுதியில் விற்பனை செய்த எத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். இதனால் வாந்தி, மயக்கம், பேதி ஆகியவை ஏற்பட்டது. உயிருக்குப் போராடியவர்களை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, கதிர்காமம் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இதுவரை சிகிச்சை பலனளிக்காமல் 6 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளச்சாராய வியாபாரம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து நான்கு பேர் (தற்போது 6 பேர்) மரணமடைந்துள்ளனர். பலரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு மரணமடைந்தோர் குடும்பங்களுக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடமையில் அலட்சியமாக இருந்த காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது சரியான நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கை இத்துடன் முடிந்துவிடவோ, நின்றுவிடவோ கூடாது. கள்ளச்சாராய விற்பனைக்கு ஊக்கம் தருவது யார் என்பதையும், பொதுமக்களிடம் விற்பனை செய்வது வரை யார், யார் இணைந்துள்ளனர் என்பதை கண்டறிந்து அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இவர்கள் சட்டத்தின் சந்து பொந்துககளில் தப்பிவிடாமல் உறுதியான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும். இப்படியான சட்டவிரோத, சமூகவிரோத செயலில் ஈடுபடுவோர்களை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.