தமிழ்நாட்டில் பாஜக தொண்டர்கள், தலைவர்கள் இருக்கிறார்கள். யாராவது ஒருவர் மேல் ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்க முடியுமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், “ஊழல் குறித்து அண்ணாமலை பேசலாம். ஆனால், அவர் சார்ந்த பாஜக ஊழலை பற்றி பேசக்கூடாது” என்று சீமான் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை, “சீமானை நாங்கள் மதிக்கிறோம். மிகப்பெரிய போராட்டத்தை அவர் எடுத்துள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் அரசியல் செய்ய வேண்டும் என்ற போராட்டத்தை எடுத்துள்ளார். சீமானுக்கும் தெரியும் இங்குள்ள ஒவ்வொரு பாஜக தலைவர்களும் அப்படிப்பட்ட அரசியலை உருவாக்குவதற்குத்தான் பாடுபடுகிறோம். கொள்கை ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் அடிப்படையில் பாஜகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் அதிகமான வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்ற ஒரு புள்ளியில் ஒத்துப் போகிறோம். பாஜகவும் அப்படிப்பட்ட கட்சிதான்.
தமிழ்நாட்டில் பாஜக தொண்டர்கள், தலைவர்கள் இருக்கிறார்கள். யாராவது ஒருவர் மேல் ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்க முடியுமா. எம்.பி.யாக எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்கள். வேறு வேறு கார்ப்பரேசன் சேர்மேனாக 5000 கோடி 8000 கோடி எனக் கையாண்டுள்ளார்கள். ஆனால், ஒருவர் மீது கூட நீங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்க முடியாது. பாஜக ஊழலை எதிர்ப்பது மட்டுமல்ல. ஊழல்வாதிகள் இல்லாத கட்சியாகவும் உள்ளது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி” என்றார்.