அரசியலமைப்புச் சட்டத்தை அழித்தொழிப்பதற்கான சதி வேலைகள் நடந்துகொண்டிருப்பதாக பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, 104 தொகுதிகள் வெற்றிபெற்றிருந்த பா.ஜ.க. சார்பில் எடியூரப்பா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கூட்டணி அமைத்து 118 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அறிவித்தும் ஆட்சியமைக்க அழைக்காத அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, நேற்று எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் வழங்கினார். ஆளுநரின் இந்த செயல்பாட்டில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி, ‘ஆட்சி இயந்திரத்தை பா.ஜ.க. கைப்பற்றிய தினத்தில் இருந்தே ஜனநாயகத்தைத் தொடர்ந்து தாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், பாபா சாகீப் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தை அழித்து ஒழிக்கும் சதியும் இந்த ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது’ என குற்றம்சாட்டினார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தனித்து நின்ற பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ள நிலையில், காங்கிரஸ், ம.ஜ.த. கூட்டணிக்கு தனது ஆதரவினை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.