8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுகவிற்கு 125 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 4 மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யவில்லை. மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் பாதியளவு (118) இருந்தாலே சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்ற நிலையில் 125க்கும் மேற்பட்டோர் இருந்தது மசோதா நிறைவேறக் காரணமாக அமைந்தது.
பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் சிபிஎம், சிபிஐ, விசிக போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மேலும், இதுகுறித்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன் தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளதாவது, ''இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது தொழிலாளர் உணர்வுக்கும் உரிமைக்கும் எதிரானது. தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கதவுகளை மூடி வேலை நேரத்தை அதிகரிப்பது எந்த வகையிலும் ஏற்றத்தக்கது அல்ல. சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது'' எனக் கூறியுள்ளார்.
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ''தொழிலாளர் திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது. தொழிலாளர் விரோதச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்'' எனத் தெரிவித்துள்ளார்.