தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தணிகைவேலை ஆதரித்து, அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (21/03/2021) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி; தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வை தி.மு.க. எதிர்க்கிறது. ஏ.சி. அறையிலேயே இருந்த மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் கஷ்டம் எதுவும் தெரியாது. அ.தி.மு.க. கூட்டணி நல்லதை நினைப்பதால், நல்லதே நடந்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க.வில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இருந்தவர்கள்தான். திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளரே அ.தி.மு.க.வில் இருந்தவர்தான்" என்றார்.
அதைத் தொடர்ந்து செங்கம் (தனி) சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் நைனாக்கண்ணுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். தன்னை போலி விவசாயி என விமர்சிக்கும் ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. 7.5% இடஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அ.தி.மு.க. அரசு. 304 தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வருவதால், சுமார் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். அரசின் உதவியுடன், இந்தியாவிலேயே உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் சாதனைப் படைத்துள்ளது தமிழகம்" எனத் தெரிவித்தார்.