முன்னாள் நிதியமைச்சரும் "ஜென்டில்மேன்' இமேஜ் கொண்டவருமான அருண்ஜெட்லி கடந்த ஆகஸ்டு 24-ஆம் தேதி மரணமடைந்தார். தனிப்பட்ட முறையில் இந்திய உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் ஆவார். கடந்த பா.ஜ.க. ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும்போதே அருண்ஜெட்லிக்கு சிறுநீரகக் கோளாறு, திசுப் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. அமெரிக்க சிகிச்சை, ஓய்வு என காலம்தள்ளி வந்த அவர், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தார்.
தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர், நிதியமைச்சர், கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் என பா.ஜ.க.வில் முக்கியப் பொறுப்புகள் பல வகித்தவர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.விடமும், தற்போது சி.பி.ஐ.யால் வேட்டையாடப்படும் காங்கிரஸ் பெருந்தலையான ப.சிதம்பரத்திடமும் கட்சி தாண்டிய நட்பைப் பேணியவர். ஏற்கெனவே மனோகர் சிங் பாரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ் என ஆளுமைகளை இழந்து தவிக்கும் பா.ஜ.க.வுக்கு இது மற்றுமொரு பேரிழப்பாகும்.