தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று (20/03/2021) தொடங்கியது.
மற்றொரு புறம் தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார்.
அப்போது தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த வானதி சீனிவாசன், "மத்திய அரசின் ஏராளமான திட்டங்களைத் தொகுதி மக்களுக்கு ஏற்கனவே கொண்டு வந்துள்ளேன். பல இடங்களில் மேம்பாலங்கள், பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எவ்விதக் குறையும் இல்லாமல் உள்ளனர். குடிநீர் குறித்து மட்டும் ஓரிரு இடங்களில் முறையிட்டுள்ளனர். கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க. நிர்வாகிகள் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். கோவை மக்களுக்கு கமல்ஹாசன் இதுவரை என்ன செய்துள்ளார்? ஊழலுக்கு எதிராக கமல்ஹாசன் என்ன செய்தார்? போராட்டம் நடத்தினாரா?" என்று கேள்வி எழுப்பினார்.