ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (13-08-23) கைதாலில் எனும் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ‘ஜன் ஆக்ரோஷ் பேரணியில்” கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரந்தீப் சுர்ஜேவாலா ஹரியானா பா.ஜ.க அரசை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
அதில் அவர், “பா.ஜ.க. மற்றும் ஜே.ஜே.பி கட்சியில் இருப்பவர்கள் அரக்க குணம் கொண்டவர்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் அரக்க குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களை நான் மகாபாரத பூமியில் இருந்து கொண்டு சபிக்கிறேன்.” என்று பேசினார். அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இதை பா.ஜ.க தரப்பினர் பகிர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ரந்தீப் சுர்ஜேவாலா இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்களிப்பைக் கொண்ட கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், அவர் அப்படி பேசி இருப்பது அவர்கள் தோற்று போவதற்கான வெளிப்பாடு. அவர்கள் தொடர்ந்து எதிர்க்கட்சியில் மட்டும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பதை அவருடைய கருத்துகள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது” என்று கூறினார்.
அதே போல், பா.ஜ.க.கட்சியின் செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், அவர்களுடைய தலைவரை தேர்ந்தெடுக்க மீண்டும் மீண்டும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இப்போது பொதுமக்களையும், ஜனார்தனத்தையும் தொடர்ந்து அவமரியாதை செய்து வருகின்றனர். பா.ஜ.க.வையும் மோடியையும் கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கள் காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா சொல்வதை கேளுங்கள். ஒரு புறம் 140 கோடி மக்களின் ஜனாதர்தனத்தின் வடிவமாக மோடி இருக்கிறார். மறுபுறம் மக்களின் அரக்கர்களாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இந்த வேறுபாட்டை நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆம் ஆத்மி கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், “ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதை நான் கேட்கவில்லை. ஆனால், நிச்சயமாக கடந்த ஒன்பது ஆண்டுகளில் பா.ஜ.க அரசு நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டும் தான் அளித்துள்ளது” என்று கூறினார்.