கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சி அமைக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியுள்ளார்கள். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்தங்களைப் பெற முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நேரடியாக நாற்பது சதவீதம் கமிஷனை முதலமைச்சர் படத்துடன் கூடிய க்யூ ஆர் கோடுகளை அச்சிட்டு இதன் மூலம் கமிஷனை செலுத்துங்கள் என்று கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவிடம் செய்தியாளர் ஒருவர் பாஜகவில் லிங்காயத் சமூகத்தை சார்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பி இருந்தார். சித்தராமையா இது குறித்து பேசுகையில், "கர்நாடக மாநிலத்தில் தற்போது லிங்காயத் சமூகத்தை சார்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக உள்ளார். அந்த சமூகத்தை சார்ந்த முதலமைச்சர் தான் பல்வேறு ஊழல்களை செய்து கர்நாடகத்தின் பெயரை பாழாக்கிவிட்டார்" என தெரிவித்திருந்தார். இது குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில், "தன்னை மட்டும் ஊழல் வாதி என்று கூறி இழிவுபடுத்தாமல் தான் சார்ந்துள்ள சமூகத்தையே ஊழல் சமூகமாக விமர்சிப்பதாக சித்தராமையா மீது குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பதிலளித்துப் பேசுகையில், "லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தலைவர்களான வீரேந்திர பாட்டீல், நிஜலிங்கப்பா போன்றோர் முதல்வர்களாக இருந்துள்ளனர். அவர்கள் நல்ல முறையில் ஆட்சி செய்தனர். நான் தற்போதுள்ள முதலமைச்சரின் ஊழல்களை மட்டுமே பேசி வருகிறேன். நான் எங்கும் அவர் சார்ந்த லிங்காயத் சமூகம் பற்றி பேசவில்லை. இந்த விவகாரத்தை பாஜகவினர் திரித்து கூறி வருகின்றனர். இதன் மூலம் பாஜகவினர் தேர்தலில் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். எனக்கு லிங்காயத் சமூகத்தின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. பசவராஜ் பொம்மை மட்டுமே ஊழல்வாதியாக திகழ்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.