Skip to main content

ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் - வீடியோ போட்டு கலாய்க்கும் காங்கிரஸ்!

Published on 01/04/2018 | Edited on 01/04/2018

ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை இந்த நாளோடு ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

 

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. பிரேக்கிங் நியூஸ் எனத் தொடங்கும் இந்த வீடியோவில், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஊழலை ஒழித்துவிட்டது. தூய்மை இந்தியா திட்டத்தை வைரவியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியை சுத்தமாக துடைத்தெடுத்து துரிதப்படுத்தியிருக்கிறார். கங்கை நதி மிகச்சுத்தமாக மாறியிருக்கிறது. ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்பட்டுள்ளது. எல்லா நகரங்களும் ஸ்மார்ட் சிட்டிக்களாக மாற்றப்பட்டு, குப்பைகளைக் கூட ரோபோக்களே அள்ளுகின்றன. அதிகப்படியான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியதால், செவ்வாய் கிரகத்து ஏலியன்கள்கூட இங்கு வேலை பெறும் சூழல் உருவாகி இருக்கிறது’ என இதுவரை மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகள் பொய்யாகியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

முன்னதாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, ‘நரேந்திரமோடி முட்டாள்கள் தினத்தை புதிய உச்சத்திற்கு தூக்கிச் சென்றவர். சொல்லப்போனால், இன்றைய தினமே அவருக்கானதுதான். நரேந்திர பாய்.. எங்களது வாழ்த்துகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு’ என கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்