நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், இன்று இரண்டாம் முறையாக சோனியா காந்தி அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். இந்நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், சிதம்பரம் காந்தி சிலை அருகே இன்று கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநிலத் துணைத் தலைவர் மணிரத்தினம், மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், நகரத் தலைவர் மக்கின், மூத்தத் துணைத் தலைவர் ஜெமினிராதா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, “குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது 2 ஆயிரம் பேர் கலவரத்தில் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு பாராளுமன்ற உறுப்பினரை உயிரோடு கொளுத்தினார்கள். இதற்கு உச்ச நீதிமன்றம், கலவரத்தைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்கவில்லையென மாநில அரசைக் குற்றம்சாட்டி முதல்வராக இருந்த மோடி உள்ளிட்ட அதில் தொடர்புடையவர்களை விசாரித்தார்கள்.
ஆனால், இந்த வழக்கு அப்படிப்பட்டது அல்ல. காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையின் மீது பாஜக வழக்கு போட்டு விசாரணை என்ற பெயரில் கட்சியின் தலைவரை அலைக் கழிக்கப்படுகிறார். இது சமூக நீதிக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது. மோடி அரசு, அரிசி, பால், தயிர் உள்ளிட்ட மக்களின் உயிரை வாழ வைக்கும் பொருள்களுக்கு வரி போட்டுள்ளது. இதனால் 3 மடங்கு உணவு பொருட்களின் விலை ஏறியுள்ளது. விலை ஏற்றத்தால் மக்களின் எதிர்ப்பு அதிகமாகும்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி ஏற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவராகச் செயல்படும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை. இது மிகவும் கண்டத்துக்குரியது. இதுகுறித்து பொதுவுடைமை கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சியினர் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். ஆளுநர் புதிய கல்விக் கொள்கை குறித்து பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் போல் பேசக் கூடாது.
நாடாளுமன்றத்தில் விலைவாசி உள்ளிட்ட மக்களின் துயரங்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிய காங்கிரஸ் எம்.பிக்கள் 4-பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. ஊழல் நடந்துள்ளதையும், மக்களுக்கான பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது என்றால் ஊழலுக்கு மாற்று வார்த்தையை மோடி தான் கூற வேண்டும்.
வங்கக் கடலில் ரூ. 80 கோடி செலவில் மறைந்த முதல்வர் கலைஞர் நினைவாகப் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் தவறு இல்லை. 3 ஆயிரம் கோடி செலவில் பட்டேலுக்கு சிலை வைத்தபோது தப்பு என்று யாரும் கூறவில்லை. பிரதமர் மோடிக்கு ரூ. 500 கோடி செலவில் விமானம் வாங்குகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் அவர்களுக்குத் தவறாகத் தெரியாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊசி வெடி போன்றவர் எதையாவது கொளுத்திப் போட்டுவிடுவார். எந்தக் குற்றச்சாட்டையும் அவரால் நிரூபிக்க முடியாது” எனக் கூறினார்.