நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.
அதன்படி, “நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். பட்டியல் பிரிவினர் (SC), பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். பட்டியல் பிரிவினர் (SC), பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு 12 ஆம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். நீட், கியூட் (CUET) தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம். பொதுப்பட்டியலில் உள்ள பல துறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும். செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பா.ஜ.க.வின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா பெயரில் சட்டம் இயற்றப்படும்.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறை அகற்றப்படும். மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும். பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூதாயத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும். ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச்சலுகை வழங்கப்படும். பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். பா.ஜ.க.வில் சேர்ந்து குற்ற வழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.