Skip to main content

துரைமுருகன் எப்படி முதுகில் குத்தப்பட்டார்? ராமதாஸ்

Published on 02/04/2019 | Edited on 02/04/2019



வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகளை நான் எனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால் அரசியலிலிருந்தும், பொதுவாழ்க்கையிலிருந்தும் ஸ்டாலின் விலகத் தயாரா? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
 

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், ‘‘ வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள சொத்துகளையெல்லாம்  டாக்டர் ராமதாஸ் அவருடைய துணைவியார் பெயருக்கு மாற்றி வைத்திருக்கிறார். தமிழக அரசு நினைத்தால் அனைத்து சொத்துகளையும் கைப்பற்றி விட முடியும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவே அதிமுக அணியில் பா.ம.க. இணைந்துள்ளது’’ என்று கூறியுள்ளார். 

 

Ramadoss


 

திமுகவினரின் மொழிநடையில் கூறினால், இது பவானி சமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஆகும். வழக்கம் போலவே வாய் புளித்ததோ,  மாங்காய் புளித்ததோ என்று இந்த விஷயத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் உளறிக் கொட்டியிருக்கிறார். 
 

மு.க.ஸ்டாலின் முதலில் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். வன்னியர் கல்வி அறக்கட்டளை  என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற புனிதமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட உன்னதமான அமைப்பு ஆகும். அது திமுக அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை போன்று பினாமி சொத்துக்களை பதுக்கி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதை ஓர் கட்சியின் தலைவராக உள்ள ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.
 

இந்த அறக்கட்டளையை அரும்பாடுபட்டு தொடங்கியவன் என்ற அடிப்படையில் அதன் நிறுவனராக மட்டுமே நான் உள்ளேன். அதைத் தவிர வேறு எந்த நிர்வாகப் பொறுப்பிலும் நான் இல்லை. வன்னியர் கல்வி அறக்கட்டளையின் தலைவராக ஜி.கே.மணி உள்ளார். செயலாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இருக்கிறார். மாவீரன் குரு அறங்காவலராக இருந்தார். மருத்துவர்கள் இரா. கோவிந்தசாமி, ப. சுந்தர்ராஜன், முனைவர் ச.சிவப்பிரகாசம் ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர். இவர்களைத் தவிர வேறு யாரும் அறக்கட்டளை நிர்வாகத்தில் தலையிட முடியாது. 
 

எனது மனைவிக்கு வன்னியர் அறக்கட்டளையுடன் எந்த தொடர்பும் இல்லை. அறக்கட்டளை சார்பில் கல்லூரிகள் கட்டப்பட்ட போது,  ஏழைக்குழந்தைகள் பயிலும் கல்விக் கோயிலாக அது அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இரவு பகல் பாராமல் சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையிலும் கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைத்த  தியாகத்துக்கு சொந்தக்காரர் அவர். தியாகங்களுக்கு விலை கேட்கும் வழக்கம் அவருக்கு கிடையாது.

 

 அறக்கட்டளை தொடங்கப்படும் போதே நான் வெளிப்படையாக ஓர் அறிவிப்பு செய்தேன். ‘‘ வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது உலகம் முழுவதும் உள்ள வன்னியர்களுக்கு சொந்தமானது. நன்கொடை செலுத்தாமல் அனைவரும் கல்வி கற்கலாம் என்று நான் அறிவித்தேன். அதன்படி கடந்த 12 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கல்விக் கோயிலில் கல்வி பெற்றுச் செல்கின்றனர். ஸ்டாலின் விரும்பினால், அவரது குடும்ப குழந்தைகளைக் கூட தகுதி அடிப்படையில் கல்விக் கோயிலில் சேர்க்கலாம்; எந்தவிதமான நன்கொடையுமின்றி கல்வி பயிலலாம். அதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.
 

வன்னியர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகம் ஒரு திறந்த புத்தகம். ஸ்டாலின் விரும்பினால் அவரது கட்சியில் உள்ள தலை சிறந்த வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்களைக் கொண்டு ஓர் ஆய்வுக்குழுவை அமைக்கட்டும். அந்தக் குழு வன்னியர் கல்வி அறக்கட்டளையின் ஆவணங்களை ஆய்வு செய்யட்டும். அவர் கூறியவாறு ஏதேனும் ஒரு சொத்து, அவ்வளவு ஏன்.... வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான 10 பைசா மதிப்புள்ள குண்டூசியை என் மனைவி பயன்படுத்துவதாக  ஸ்டாலின் அனுப்பும் குழு கண்டுபிடித்தால் கூட, நான் பொதுவாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

 

அதேநேரத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகளை நான் எனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால் அரசியலிலிருந்தும், பொதுவாழ்க்கையிலிருந்தும் ஸ்டாலின் விலகத் தயாரா?

 

 ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் வன்னியர் கல்வி அறக்கட்டளையில் ஆய்வு செய்ய நான் அனுமதிப்பதைப் போன்று திமுக அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை ஆகியவற்றை பா.ம.கவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய அனுமதிக்க ஸ்டாலின் தயாரா?

 

mks



திமுகவின் தூண்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், மதுராந்தகம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி ராமச்சந்திரன், ஏ.ஜி. சம்பத் உள்ளிட்ட வன்னிய சமுதாய தலைவர்கள் ஸ்டாலின் மற்றும் அவரது துதிபாடிகளால் எப்படியெல்லாம் அவமதிக்கப் பட்டார்கள்; எப்படி எல்லாம் குமுறினார்கள் என்ற வரலாறு திமுகவில் உள்ள வன்னியர்களுக்கு தெரியும். இப்போதும் திமுகவில் உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வீரபாண்டி ராஜா ஆகியோர் தொடர்ந்து அவமதிக்கப்படும் போதிலும், அவற்றை சகித்துக் கொண்டிருக்கின்றனர்,  திமுக பொருளாளர் துரைமுருகன் இப்போதும் எப்படி முதுகில் குத்தப்பட்டார்? என்பவை எல்லாம் ஊரறிந்த வரலாறு.

 

 திமுகவில் உள்ள வன்னியர்களாக இருந்தாலும், பொதுவான வன்னியர்களாக இருந்தாலும் சிங்கங்களைத் தான் மதிப்பார்கள். சிறு நரிகளின் கதறல்களை கண்டு கொள்ள மாட்டார்கள். இன்னும் 15 நாட்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் திமுகவுக்கு அவர்கள் பாடம் புகட்டுவார்கள்; அனைத்து தொகுதிகளிலும் வீழ்த்துவார்கள். இது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்