
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணிக்கு முடிவடையவுள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கான முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், ஈரோடு சம்பத் நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும் திட்டத்திற்கான தேதி மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று தேர்தல் அதிகாரி சிவகுமாரிடம் அதிமுகவை சேர்ந்த இன்பதுரை புகாரளித்துள்ளார்.