Skip to main content

கட்சிக் கொடியின் வண்ணம் பச்சையும், நீலமுமா..? நிர்வாகிகளிடம் குறியீடு காண்பித்த ரஜினி.!!!

Published on 11/05/2018 | Edited on 11/05/2018

 

rajini

 

 


   

 சில ஆளுமைகள் தங்களுடைய எண்ணவோட்டத்தை, செயல்பாட்டுத் திட்டத்தினை நேரடியாகக் கூறாமல் குறியீடுகளைக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வார்கள். அந்த இடத்தினைக் கடந்த பிறகு தான், "இது முன்னரே சொன்னது போல் இருக்கின்றதே.!" என பின்னோக்கி நகர்வது ஏனையோருக்கு வழக்கமான ஒன்று. புதனன்று நடந்த காலா இசை வெளியீட்டிற்குப் பிறகு, வியாழக்கிழமையன்று தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தவர், தன்னுடைய அரசியல் கட்சி, கொள்கை, கொடியின் வண்ணம், கூட்டணி மற்றும் எதிர்காலம் எனப் பலவற்றை நேரடியாகவும், குறியீடாகவும் பகிர்ந்துள்ளார் ரஜினி. இது தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்கே.!


 
     முன்னதாகக் கொடுத்த தகவலின் படி, ராகேந்திரா திருமண மண்டபத்தில் வியாழனன்று காலை 9.;30 மணிக்கே திரண்டிருக்கின்றனர் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ.க்கள் மற்றும் மா.செ.க்கள் இல்லாத மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களுமாக மொத்தம் 40 நபர்கள். சிலர் மட்டுமே அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை டிபன் சாப்பிட்டுவிட்டு ரஜினியின் அழைப்பிற்காக காத்திருக்க, சரியாக 10.15 மணிக்கு அங்கேயிருந்த ஒட்டுமொத்த நபர்களையும், சென்னைத் தலைமையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று குளிரூட்டப்பட்ட வாகனங்களில் போயஸ்கார்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போயஸ்கார்டன் ரஜினி இல்லத்திற்கு மூன்று வாகனங்களும் சென்ற நேரம் 10.50. நேரத்திற்கு வந்து வாகனத்தில் ஏறாமல் போனவர்கள் அவசரம், அவசரமாக தங்களது வாகனத்திலேயே இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். ஒரு கையில் பழச்சாறு கொடுத்து, மறு கையால் மாவட்ட நிர்வாகிகளின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது அங்கு தான். சரியாக 11.05 வீட்டின் வரவேற்பு அறைக்கு வந்த ரஜினி, வந்தவர்களுக்கெல்லாம் வணக்கம் தெரிவித்துவிட்டு மாநில நிர்வாகி சுதாகர், செயலாளர் ராஜூ மகாலிங்கம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஆறு நபர்கள் சுற்றி நிற்க உரையாட ஆரம்பித்தார் அவர்.

 

rajini1


 

  " பூத் கமிட்டியில் பணியாற்ற 30 நபர்கள் வேண்டும். ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இது பூத் கமிட்டிக்கான ஊழியர்கள் மட்டுமே. தமிழகம் முழுவதுமாக அனைத்து பூத் கமிட்டிகளிலும் ஆட்களை சேர்த்துவிட்டால் மொத்தம் 22 லட்சம் நபர்கள் வருகிறார்கள். இது முடிந்தவுடன் கூறுங்கள்.! அப்புறம் கட்சி.! கொடி தான்.! ஹேப்பி தான்." என்றவர் முகவாயைத் தேய்த்தபடி அனைவரையும் உற்று நோக்க, " தலைவா.! என்னுடைய தூத்துக்குடி மாவட்டத்தில் அத்தனைப் பூத்துகளுக்கும் ஆட்களைப் போட்டுவிட்டேன். அதனால் என் சைடு ஓ.கே.தலைவா.!" என மகிழ்ச்சியாக குரல் கொடுத்தார் தூத்துக்குடி ரஜினி ரசிகர் மன்ற மா.செ.வான ஸ்டாலின்.

 

தஞ்சாவூர் மா.செ.கணேசனோ., " தலைவா.! நானும் ஏறக்குறைய பணிகளை முடித்துவிட்டேன். குறிப்பிட்ட ஊரிலுள்ள எட்டு பூத்துக்களிலும் தலா 30 பெண்களை ஊழியர்களாகப் போட்டுவிட்டேன்." என அவர் பங்கிற்கு ஓங்கி குரலெழுப்ப, அவரை நோக்கி கையைக் காட்டி சின்னதாக சிரிப்பை உதிர்த்துவிட்டு அடுத்தப் பேச்சைக் கேட்கலானார். " முதலில் நமக்கு இளைஞர் பட்டாளம் இல்லை. இப்ப மற்றைய கட்சிகளின் சுயரூபம் தெரிந்துவிட்டதால் இப்போது நம்மை நோக்கி வருகிறார்கள்." என்று உட்கார்ந்திருக்கின்றார் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கல்லல் ரவிக்குமார். சுமார் 6 மாவட்டங்களிலிருந்து மட்டும் பூத் கமிட்டிக்குப் பேசிமுடித்திருக்க, வருகின்ற ஜூன் 2ம் தேதி தான் பூத் கமிட்டி அமைப்பதற்கான கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது ரஜினியால்.

 

 

 

 " தலைவா.! நாம் கட்சி ஆரம்பிச்சவுடன் பி.ஜே.பியுடன் தான் கூட்டணி வைப்போமா..?" என தர்மபுரி மாவட்டத்திலிருந்து கேள்வி கேட்கப்பட, " என்னப்பா..? ரிப்போர்ட்டர் மாதிரி கேட்குறீங்க.! பி.ஜே.பி.யின் நிலை தான் தெரியுதே..? நாம போய் கூட்டணி வைப்போமா..?" என எதிர்க்கேள்வி கேட்டு அங்கிருந்த அனைவரின் முதல் சந்தேகத்தையும் தீர்த்து வைத்தவர்., " நான் பிறப்பால் தமிழன்.! சொந்த ஊர் கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பம்.! மும்பைக்குப் போனால் "மதராஸி" வார்றாங்கிறான்.! கர்நாடகாவிற்கு சென்றால் "தமிழன்"ங்கிறான்.! இங்கே "கன்னடத்துக் காரன்"ங்கிறாங்க.! என்னத்தை சொல்வது..? உங்களால் நான் போதும் என்கிற அளவிற்கு சம்பாதிச்சுட்டேன். தென்னிந்திய நதிகளை இணைப்பதும், தமிழ்நாட்டிலுள்ள கரப்ஷனையும் ஒழிக்கத்தான் கட்சியே ஆரம்பிக்கின்றேன். என்னையப் பொறுத்துவரை அது நடந்து முடிந்த மறு நாளே கண்ணை மூட நான் ரெடி.!" என செண்டிமெண்டாக தாக்க நிலைகுலைந்துவிட்டனர் மா.செ.க்களான ரசிகர்கள்.

 

  தொடர்ந்து விடாது கண்ணீர்த்துளியுடன் பேசியவர்., " இப்பத் தான் சாதியாக இருக்கிறாங்க.! பத்து, இருபது தலைமுறைக்கு முன்னாடி நம்ம மூதையர்கள் எப்படி இருந்தாங்கன்னு தெரியுமா..? அவங்களிடம் மேல் சாதி, கீழ்சாதி என எதுவும் தெரியாது. நம்ம கட்சியைப் பொறுத்தவரை தலித் ஒருத்தர் புறக்கணிக்கப்பட்டார் என்பதே இருக்கக் கூடாது. அவங்க இல்லாமல் நானும் இல்ல.! கட்சியும் இல்ல.!" என தலித் அரசியல் பேசியவர், "பாருங்க.!! சொன்ன வேலையை முடிங்க.! முடித்த கொஞ்ச நாளிலேயே கட்சி. கொடியினை காண்பிக்கிறேன். அடிச்சா 234 தான்.!!! தைரியமாகப் போய்ட்டு வாங்க.!" என்றவர் அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துவிட்டு வழியனுப்பி வைத்தார் ரஜினி.. தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் புகைப்படங்களை வெளியீட்டு ஆக்கபூர்வமான சந்திப்பு என்றும் பகிர்ந்துள்து குறிப்பிடத்தக்கது.

 

 " தலைவர் கூறியபடிப் பார்த்தால் அவரது எண்ணமும், கொள்கையும் இதுவாகத் தான் இருக்கும். அதாவது ஊழலற்ற நிர்வாகம், நதி நீர் இணைப்பு ஆகியனவே.! தலித்திற்கான நீலமும், நதிகள் இணைப்பிற்கான பச்சையும், அனைத்தும் வெளிப்படை என்பதற்காக வெள்ளை நிறத்தையும் கட்சிக் கொடியின் வண்ணமாக பயன்படுத்த வாய்ப்பிருக்கின்றது." என்கின்றனர் கூட்டத்தில் கலந்து கொண்ட தென்மாவட்ட மா.செ.க்கள். அவர்களுக்கு அவர்களது தலைவரின் குறியீடு புரிந்துவிட்டது. 


 

சார்ந்த செய்திகள்