கடலூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கடல்தீபனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் பிரச்சாரம் செய்தார். அவர் பேசும்போது, “தென் மாவட்டமான சிவகங்கையைச் சேர்ந்த நான், முதலில் வட மாவட்டத்தில் உள்ள கடலூரில் கடந்த தேர்தலில் போட்டியிட்டதற்கு காரணம், தமிழர்களுக்கென பொதுவான ஒரு தலைவர் இல்லை என்றுதான்.
மேலும் இருக்கிற எல்லோரும் சாதி, மத தலைவர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் அல்லாதவர்கள்தான் தமிழர்களுக்கு இன தலைவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையை என்னுடைய சிறு வயதில் இருந்தே அறிந்தவன் நான். தென் மாவட்டத்தில் எங்கு நின்றாலும் சாதி அடையாளம் வரும். அந்த முத்திரை, அடையாளம் வரக்கூடாது என்பதற்காகத்தான் கடலூரில் வந்து நின்றேன். தமிழ்நாட்டை அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. அரை நூற்றாண்டு காலம் தமிழகம் வளர்ச்சி அடையவில்லை.
கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவை மிகப்பெரிய சந்தை பொருளாக, வியாபாரப் பொருளாக மாறிவிட்டன. தொடர்ந்து ஆட்சியில் இருந்து நம்மை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சாமிக்காக அரசியல் செய்யாமல், வாழும் பூமிக்காக அரசியல் செய்கிறோம். தண்ணீரை தவிர எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தத்துவம் என்று எதுவும் கிடையாது. தமிழகத்தின் நிலையை மாற்ற ஒரு ஓட்டு தேவை. அதை நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் அளிக்க வேண்டும். அதன் பிறகு நான் நாட்டை பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.