தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று (09.12.2024) காலை 09.30 மணிக்குத் தொடங்கியது. அப்போது, மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தைத் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதன்படி இந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதன் பின்னர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனி தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று (10-12-24) தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. அப்போது அதானி விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டின் அதானி நிறுவனத்தின் தொழில் முதலீடு குறித்து பொதுவெளியில் வரும் தவறான புகார்களுக்கு நம்முடைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவான விளக்கத்தை ஏற்கெனவே இரண்டு மூன்று முறை விளக்கம் கொடுத்திருக்கிறார். அதற்கு பிறகும், அதுபற்றி செய்து வந்துகொண்டு தான் இருக்கிறது. அதானி என்னை வந்து வந்து சந்திக்கவும் இல்லை, நானும் அவரை பார்க்கவும் இல்லை. ஏற்கெனவே நான் பலமுறை தெளிவுப்படுத்திவிட்டேன். நான் அதானியை சந்திக்கவில்லை.
அதானி மீது சொல்லப்பட்டிருக்கிற குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை அமைக்க வேண்டும் என்றும், அந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். தி.மு.க மீது குறைகூறிச் சொல்லிக் கொண்டிருக்கும் பா.ஜ.கவோ, பா.ம.கவோ இந்த கோரிக்கையை ஆதரிக்க தயாராக இருக்கிறதா?.
நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் வைத்த கோரிக்கையை ஆதரிக்க தயாராக இருக்கிறீர்களா? என்ற கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். இதுவரைக்கும் நான் பொறுத்துக்கொண்டு தான் இருந்தேன். அதற்கான எந்த விளக்கமும் நான் சொல்லவில்லை. உரிய அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி அதானி விவகாரம் குறித்து ஏற்கெனவே விளக்கம் அளித்துக்கொண்டு வந்தார்” என்று பேசினார்.