திருப்பூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொண்ட நிலையில் தற்பொழுது பேசிவருகிறார்.
அவரது உரை பின்வருமாறு, ''குடும்ப ஆட்சிக்கு, அரசியலுக்கு எதிரான கட்சி பாஜக மட்டுமே. திமுக கட்சி தமிழக மக்களின் கலாச்சாரம், பண்டிகையை மாற்ற முயல்கிறது. குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. மிகத் தெளிவான உண்மையைச் சொல்கிறேன். நீங்கள் காஷ்மீரிலிருந்து ஆரம்பித்து தென் இந்தியா வரை எடுத்துக்கொள்ளுங்கள் மேற்கு வங்கம், தென்பகுதியில் ஆந்திரா, தெலுங்கானா, சென்னை இங்கெல்லாம் குடும்ப கட்சிகளைக் காணலாம். இந்த குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு பாஜகதான். மன்னித்துக்கொள்ளுங்கள் தேசிய கட்சி எனகூறிக்கொள்ளும் காங்கிரஸ் கூட குடும்ப கட்சியாக மாறிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு, புதிய எண்ணங்களை உருவாக்குவதற்கு, மாற்று வழிகளை உருவாக்குவதற்கு, நாடு முன்னேறுவதற்கு, மக்களைத் துயரங்களிலிருந்து மீட்பதற்கு ஒரே மாற்றுவழி பாஜகதான். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், கலாச்சார வளர்ச்சிக்கும் பாஜக என்றுமே துணைநிற்கும்''என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜா, குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர்.