
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அதிரடி முடிவுகள் வெளியாகியது. அதன்படி இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே ஒன்றுக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தான் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. இன்று பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தங்கள் வான்வெளி பகுதியை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இந்தியாவுடன் ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்கும் உரிமையை பயன்படுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்திருக்கிறது. அதேபோல் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறியதாக சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் முறையிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தியா பதிலடி கொடுத்தால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசு அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் இந்தியாவின் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது. தவறுதலாக எல்லை தாண்டி சென்ற பிஎஸ்எப் வீரரை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சிறைபிடிக்கப்பட்ட இந்திய வீரரை பாதுகாப்பாக மீட்பது குறித்து இந்தியா-பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிடிபட்ட இந்திய வீரரின் புகைப்படமும் தற்போது வெளியாகி இருக்கிறது.