
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இரண்டரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தையின் உதட்டில் காயம் இருந்ததால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தாய் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்துள்ள மகாதேவன்குளம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர்கள் பிருந்தா-சரத் தம்பதி. கணவர் சரத் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை 3 மணிக்கு தன்னுடைய இரண்டரை வயது பெண் குழந்தை இறந்துவிட்டதாக தன்னுடைய தாய்க்கு பிருந்தா தகவல் தெரிவித்துள்ளார். குழந்தை எப்படி இறந்தது பிருந்தாவின் தாயார் கேட்டுள்ளார்.
கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில் குழந்தை இறந்ததாக பிருந்தா தெரிவித்துள்ளார். ஆனால் சந்தேகமடைந்த பிருந்தாவின் தாய் காவல்துறையில் புகார் அளித்தார். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் தாய் பிருந்தாவிடம் விசாரணை மேற்கொண்டனர். கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில் குழந்தை இறந்ததாக தெரிவித்த பிருந்தா போலீசாரின் தீவிர விசாரணையில் அந்த அதிர்ச்சி கொடுக்கும் தகவலை சொன்னார்.
நேற்று இரவு சில நபர்கள் பிருந்தாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்பொழுது தகாத உறவில் இருக்க முயன்ற பொழுது இடையூறாக இருந்த குழந்தையை ஒருவர் தூக்கிச் சென்றதாகவும் பின்னர் குழந்தை காயத்துடன் இறந்த நிலையில் கொடுக்கப்பட்டதும் தெரிந்துள்ளது. அதிகாலை 3 மணிக்கே பிருந்தா இந்த தகவலை தாய்க்கு சொல்லியுள்ளார். ஆனால் நடந்தவற்றைச் சொல்லாமல் கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக பொய் சொல்லியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயை கைது செய்துள்ள போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும் உயிரிழந்த பெண் குழந்தையின் உதட்டில் காயம் இருப்பதால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை திசையன்விளை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.