ஏப்ரல் 1ஆம் தேதி வரைக்கும் 144 என்று எடப்பாடி அறிவித்து இருந்தார். அது நடைமுறைக்கு வந்த இரவே 21 நாள் முடக்கம் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் இந்தியா முழுவதும் முடங்கியது. கரோனா வைரஸின் தாக்கம் கொடுமையானது. அதனால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கின்றனர். இத்தனை நாள் முடங்கினால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று பாமர மக்களிடமும் உழைக்கும் மக்களிடமும் பயமிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த முடக்கம்தான் இப்போதைய தேவை என்று எதிர்க்கட்சிகளும்கூட பிரதமரின் முடிவை ஆதரித்துள்ளனர்.
மோடியின் இந்த ஊரடங்கு உத்தரவை காங்கிரஸின் சினியர் லீடர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வரவேற்றார்கள். அதே நேரத்தில் இதை இன்னும் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்பது தான் எதிர்க்கட்சிகளோட வலியுறுத்தல் என்று சொல்கின்றனர். மார்ச் 22ந் தேதி மக்கள் ஊரடங்கு என்று கூறிவிட்டு, மாலை 5 மணிக்கு கைதட்ட கூறினார் மோடி. அப்போதே ராகுல் அது சரியான அணுகுமுறை இல்லை என்று ட்வீட் செய்தார். அன்றைய தினம் 5 மணிக்கு கைதட்ட வேண்டும் என்று மணி அடித்துக் கொண்டும், சங்கு ஊதிக் கொண்டும் ஊர்வலமாகச் சென்று, காலையிலிருந்து கட்டுப்பாடோடு இருந்த ஊரடங்கைச் சல்லி சல்லியாக உடைத்து கரோனாவை வரவேற்ற மாதிரி செய்துவிட்டார்கள். இதில் வடநாட்டைச் சேர்ந்த பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களுக்கு மிகவும் பங்கு உண்டு என்று கூறியிருந்தனர்.