கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சியில் கடந்த 4ம் தேதி தலைவர் தேர்தல் நடந்த போது திமுக கவுன்சிலர்கள் 3 பேர் கடத்தப்பட்டதாக தேர்தல் நடத்தக்கூடாது என வலியுறுத்தி மதிமுக, திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் தேர்தல் ஆவணங்களை கிழித்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாமக, அதிமுக, சுயேட்சை உறுப்பினர்கள் 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தலை உடனடியாக உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 23ம் தேதி (இன்று) காலை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்தது. அதன்படி இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆடுதுறை பேரூராட்சியில் காலை 9.30 மணிக்கு தலைவர், துணைத்தலைவர் தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலை கும்பகோணம் கோட்டாட்சியர் கண்காணிப்பில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது.
பேரூராட்சி தேர்தலுக்கு பாமக அதிமுக சுயேச்சைகள் உட்பட 8 உறுப்பினர்கள் மட்டுமே வருகை தந்தனர். திமுக, மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சேர்ந்த 7 உறுப்பினர்கள் வராததால் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் ஆடுதுறை பேரூராட்சி தேர்தலில் திமுக, மதிமுக உள்ளிட்ட 7 பேர் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் பாமக சார்பில் பேரூராட்சி தலைவருக்கு வேட்பு மனு அளித்த ம.க. ஸ்டாலின் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
பேரூராட்சி தலைவராக பாமக சார்பில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ம.க. ஸ்டாலின் தொண்டர்கள் புடைசூழ வெடி வெடித்து அவருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்து கொண்டாடினர்.