தமிழக சட்டமன்றத் தோ்தல் தேதி அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, தோ்தலில் போட்டியிட காத்திருந்த கட்சிகள் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓட ஆரம்பித்துவிட்டன. அந்தந்த கட்சியில் இருந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளராக நிற்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஒரு சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிய ஆரம்பித்தன. அதில் அதிமுகவில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீா்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சோ்ந்த கூட்டுக்குழு, தொகுதி வாரியாக வேட்புமனு தாக்கல் செய்தவர்களிடம் தனி அறையில் வைத்து நேர்காணல் நடத்தினர்.
விண்ணப்பதாரா்களை ஒட்டுமொத்தமாக பெரிய அறைக்கு அழைத்து, உங்களில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறினர். எனவே யார் அறிவிக்கப்பட்டாலும் நீங்கள் அவா்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தனா். தனித்தனியாக யாரையும் அழைத்து அவா்களிடம் நேர்காணல் நடத்தப்படாமல், கூட்டம் கூட்டமாக அழைத்து இந்தக் கட்டளைகளை மட்டும் பிறப்பித்துள்ளனா். இதில் திருச்சிக்கு உட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதியில் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவா்களில் திருச்சி, முசிறி, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட தொகுதிகள் முத்தரையா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. திருவெறும்பூா், திருச்சி மேற்கு தொகுதிகள் கள்ளா் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. மணப்பாறை தொகுதி ஊராலி கவுண்டா் சமூகத்துக்கும், திருச்சி கிழக்கு தொகுதி வெள்ளாளர் சமூகத்துக்கும், லால்குடி தொகுதி உடையார் சமூத்துக்கும், துறையூா் தனி தொகுதியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் 2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற உறுப்பினராக ஸ்ரீரங்கம் தொகுதியைக் கேட்டார் வளர்மதி. அதனையடுத்து 2016ஆம் ஆண்டு மே மாதம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். ஆனால் அவர் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட நாளிலிருந்து தொகுதியில் சரியான அணுகுமுறையைக் கையாளவில்லை என்றும், தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து பெரிய அளவில் அதை சரி செய்வதற்கான முனைப்பு காட்டுவதில்லை என்றும், கட்சி செயல்பாடுகளில் மிகுந்த தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை தகவல் அளித்தது.
ஆனாலும், வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் அமைச்சர் வளர்மதி. மீண்டும் வேட்பாளராக தேர்வாகிவிடலாம் என்று காத்திருந்த வளர்மதிக்கு, உளவுத்துறை தெரிவித்த அந்த தகவலின் அடிப்படையில், இந்த முறை அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த வாய்ப்பை முன்னாள் அமைச்சர் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் அதிமுக கட்சியில் காலியாக இருந்த பொறுப்புகளில் தன்னுடைய சமுதாயம் சார்ந்த முத்தரையர் உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதாக சர்ச்சையில் சிக்கியவர். ஸ்ரீரங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் பலர் மேடையில் அமர்ந்திருக்கும் அமைச்சர் வளர்மதியைத் தாக்க முயன்றனர். எனவே தனது சமூகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தும் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான பணிகளும் நடைபெறாமல் கட்சிப் பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டதால் அவருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறும் என எதிர்பார்த்திருந்த வளர்மதி, தனக்கு சீட் இல்லை என்பதால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார். அதனால், ஸ்ரீரங்கம் தொகுதியில் அவர் சுயேச்சையாக களமிறங்க யோசனை செய்துவருவதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.