இன்று செய்தியார்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில், ''மத்திய அரசின் திட்டம் என்பது ஏழை எளிய மக்களுக்கான திட்டம். இதனை தமிழக அரசு வித்தியாசப்படுத்தி பார்க்காமல் இந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அமைச்சகத்தின் சார்பில் அங்கங்கு முகாம்கள் நடத்தி கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களை இதில் இணைக்க முடியும். இது மோடி அரசாங்கத்தின் திட்டம், பிஜேபி கட்சி நடத்துகின்ற ஆட்சியில் வருகின்ற திட்டம் என்று என்றெல்லாம் வித்தியாசப்படுத்தி பார்க்காமல் ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் மூலம் உதவி செய்ய வேண்டும்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனியார் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியின் போது மத்திய அரசு சொல்லும் ஆலோசனைகளை நாங்கள் ஏன் ஃபாலோ பண்ண வேண்டும், நிதி துறையில் மத்திய அரசு நோபல் பரிசு வாங்கி இருக்கிறதா? தமிழகம் எல்லா புள்ளிகளும் முன்னணியில் இருக்கும் பொழுது அவர்களிடம் ஏன் ஆலோசனை பெற வேண்டும் என்ற கருத்தை வைத்துள்ளார் அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன?' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த வானது சீனிவாசன், ''நானும் அதை பார்த்தேன். அதற்கு பாஜகவினுடைய தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்ததற்கு பிறகு எங்களது மாநில தலைவரை கூட டிவிட்டரில் ஒரு மூன்றாம் தர விமர்சனத்தை பதிவு பண்ணி இருக்கார் அமைச்சர். இது ஒன்றும் முதல் தடவை அல்ல இதற்கு முன்பு பாஜக மாநில தலைவர் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைத்தாலும் மாநிலத்தின் நிதி அமைச்சர் என்ற பொறுப்புக்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் கீழ்த்தரமான விமர்சனங்களை வைப்பதும், நான் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தேன், நான் நான்காம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை என்று அவர் பெருமை பேசுவது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம் என்றால் அவர் ஒரு விஷயத்தை சொல்கிறார். நான் நல்லா படிச்சிருக்கேன், ஃபாரின்ல டிகிரி வாங்கி இருக்கேன், நான் ஃபாரின்ல வேலை செய்திருக்கேன் அதனால் நான் சொல்றேன். மத்திய அரசாங்கத்தில் நீங்கள் எல்லாம் நோபல் பரிசு வாங்கினீர்களா? நீங்க படிச்சிட்டு வந்தீங்களா? நீங்க சொல்றதெல்லாம் நான் ஏன் கேட்டுக்கணும் என்றெல்லாம் அவர் சொல்வதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், மாநிலத்தினுடைய முதலமைச்சரையே விமர்சனம் செய்கிறார் என்று பார்க்கிறேன்.
ஏனென்றால் அவர் சொல்ல வருகின்ற செய்தி நோபல் பரிசு வாங்குபவர்கள், யுனிவர்சிட்டியில் டிகிரி வாங்கியவர்கள் தான் ஆட்சி நடத்த வேண்டும், மக்களைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டும் என்றால் அப்பொழுது மாநிலத்தின் முதலமைச்சர்தான் அவருக்கு பதில் சொல்ல வேண்டும். திமுகவில்கூட எத்தனையோ பேர்கள் கல்லூரி பக்கம் செல்லாமலேயேகூட மிகச் சிறந்த மக்கள் பணியாளர்களாக, மக்கள் தலைவர்களாக உருவாகி இருக்கிறார்கள். அரசியலில் இருப்பதற்கு அடிப்படையானது மக்களை நேசிக்கின்ற குணம். நான் எந்த இடத்தில் படித்தேன் என்ற சர்டிஃபிகேட் அவசியமில்லை. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை'' என்றார்.