கிட்டதட்ட 25 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா, வருவாரா என எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். அவரும் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகவிருக்கும் நேரத்தில், விரைவில் வருவேன், இன்னும் நாள் வரவில்லை என்று கூறியவண்ணமே இருந்தார்.
தற்போது அவரது அண்ணனும் அரசியல் வருகை குறித்து தீர்க்கமாக பேசிவருகிறார், ரஜினி அதற்கு எந்த தடையும் போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக, அரசியல் வருகை முயற்சி வலுபெற்றிருக்கிறது. இதற்கு ஒரு காரணம் கமலின் அரசியல் வருகை.
கமல்ஹாசன் கடந்த 2018 பிப்ரவரி 21ம் தேதி மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கிய ஒன்றரை வருடங்களிலேயே தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் நிற்கின்றனர். இந்தத் தேர்தல் கணிசமான வாக்குகள் மக்கள் நீதி மய்யத்திற்கு வந்துள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மக்கள் நீதி மய்யத்திற்கு பதிவான ஓட்டுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம், ரஜினி இல்லையென்பதால்தான் கமலுக்கு ஓட்டு எனவும் கூறிவருகின்றனர்.
ரஜினியும், கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு எத்தனை சதவீதம் வாக்குவங்கி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அரசியல் முடிவை அறிவிப்பார் என்றும், ஒருவேளை நல்ல சதவீதமாக இருந்தால் உடனே அமைய வாய்ப்பிருக்கிறது என்றும் நெருங்கிய வட்டாரத்தினர் கூறிவருகின்றனர். மேலும் தற்போது இருபெரும் அரசியல் தலைவர்களும் இல்லையென்பதால் தைரியமாக முடிவெடுக்கலாம் என்றும் அவரிடம் கூறி வருகின்றனர்.
இது வெறும் பட புரமோஷனாக கடந்துபோகுமா இல்லை, 25 வருட வினாவிற்கு விடையாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.