
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் இந்த குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் திமுகவில் கட்சி ரீதியாகச் செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்குக் கடந்த வாரம் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதன்படி ஈரோட்டிற்கு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், விழுப்புரம் மாவட்டத்திற்கு லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்கு அப்துல் வஹாப்பும், விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்குச் செஞ்சி மஸ்தானும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டார். நீலகிரியில் கே.எம்.ராஜூ புதிய மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். திருப்பூர் மேயர் தினேஷ் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக ரமேஷ் ராஜ் நியமிக்கப்பட்டார். தஞ்சாவூருக்கு பழனிவேல் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பிறப்பித்துள்ளார். அதே சமயம் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்ம செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சட்டமன்றத் தேர்தலையொட்டி, கட்சி பணிகளை மேற்கொள்ள அதிமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.