காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் கண்டிப்பாகச் செயல்படுத்தப்படும், என மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சருக்கு பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அம்மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.14,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்; அத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நடப்பு நிதியாண்டில் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார். இராமநாதபுரம் மாவட்டத்தை வளப்படுத்தும் இத்திட்டம் குறித்த முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று 20 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், தி.மு.க ஆட்சியில் 2008-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அப்போதே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் ரூ.3,290 கோடியில் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருக்கும். ஆனால், இத்திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தவிர, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, அத்திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கடந்த 12 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. நிதி ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக காவிரி - வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் மதிப்பு இப்போது ரூ.14,000 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது பா.ம.க.வின் கனவுத் திட்டங்களில் ஒன்று. 8.44 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகத் திகழக் கூடிய இந்தத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
ரூ.14,000 கோடி மதிப்பிலான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, தருமபுரி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்கும் தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை அறிவிப்பதில் என்ன தயக்கம்? என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. தருமபுரி மாவட்டத்தில் 10 அணைகள், 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1,230 நீர்நிலைகள் உள்ளன. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி தண்ணீரைக் குழாய்கள் மூலம் கொண்டு வந்து 1,230 நீர்நிலைகளிலும் நிரப்புவதுதான் தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் ஆகும்.
இந்தத் திட்டத்திற்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 3 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தான் தேவைப்படும். காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 டி.எம்.சிக்கும் கூடுதலான தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில் இது ஒரு பொருட்டல்ல. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்ப் பாதைக்கு இணையாகவே இதற்கான குழாய்ப் பாதையை அமைக்க முடியும் என்பதாலும், ஏரிகளுக்கு இடையே நீர் செல்லும் பாதை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பதால் ஒரு சில ஏரிகளில் நிரப்பினால், அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீர் தானாகவே சென்று விடும் என்பதாலும் இத்திட்டத்தை மிகவும் எளிதாகச் செயல்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விடலாம்.
காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.650 கோடி மட்டும் தான். இது காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான செலவில் வெறும் 4.64% மட்டும் தான். அதே நேரத்தில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தால் பயனடையும் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு, அதாவது 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்; 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். மேலும் தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில் ஃபுளோரைடு கலந்திருப்பதால் நிலத்தடி நீரை குடிக்கும் மக்கள் ஃபுளூரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தருமபுரி மாவட்டத்தில் நோய்ப் பாதிப்பு கணிசமாகக் குறையும் வாய்ப்புள்ளது. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், இது மற்ற எந்தப் பாசனத் திட்டங்களையும் விட குறைந்த செலவில், அதிக பயனளிக்கும் திட்டம் ஆகும்.
ஒப்பீட்டளவில் தமிழகத்தின் எந்த மாவட்டத்தையும் விட தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளும் இல்லாததால் 5 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் செல்கின்றனர். தருமபுரி மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டம். சராசரி மழை அளவில் பாதி கூட பெய்வதில்லை. அதனால், பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1,200 அடிக்கும் கீழ் சென்று விட்டது. பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், அரூர் ஆகிய வட்டங்களில் ஆழ்துளை குழாய்க் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயம் செய்யப்படும் பரப்பு வேகமாகக் குறைந்து வருகிறது.
காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செழித்து, வேலைவாய்ப்புகளும், பிற வாழ்வாதார வாய்ப்புகளும் ஏற்படும். அதைக் கருத்தில் கொண்டுதான் காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி முதல் தருமபுரி மாவட்ட மக்களிடம் 10 லட்சத்துக்கும் கூடுதலான கையெழுத்துகளைப் பெற்று தமிழக முதலமைச்சரிடம் பாட்டாளி மக்கள் கட்சி ஒப்படைத்தது. 2019-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்து காவிரி உபரி நீர் பாசனத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டோம். பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, மக்களவைத் தேர்தலின் போது தருமபுரி தொகுதியில் என்னை ஆதரித்துப் பரப்புரை செய்தபோது, காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் கண்டிப்பாகச் செயல்படுத்தப்படும் என்று 9 இடங்களில் உறுதி அளித்தார். ஆனால், தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
பின்தங்கிக் கிடந்த எத்தனை மாவட்டங்கள் முன்னேறின என்பதுதான் ஓர் ஆட்சியின் செயல்பாட்டை அளவிடுவதற்கான முக்கியக் காரணியாகும். தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற ஏதேனும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் தான் தமிழகத்தில் நடப்பது வளர்ச்சிக்கான ஆட்சி என்று போற்றப்படும். எனவே, தருமபுரி மாவட்டத்தைச் செழிப்பாக்குவதற்கான காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அறிவித்து, அதற்கான நிதியையும் முதலமைச்சர் பழனிசாமி ஒதுக்கீடு செய்ய வேண்டும்''. இவ்வாறு கூறியுள்ளார்.