பாஜக அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து காயத்ரி ரகுராம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த போது என் சொந்த செலவில் ஏகப்பட்ட நல்ல செயல்களைச் செய்துள்ளேன். நான் பாஜகவிற்கு களங்கத்தை ஏற்படுத்துகிறேன் எனச் சொல்லுவது மிக வருத்தத்தைக் கொடுக்கிறது.
மூன்று மாதத்திற்கு முன்னால் கட்சியில் சேர்ந்த செல்வக்குமார் என்ற நபர் வந்த உடன் மிகப்பெரிய பொறுப்பு வாங்கி எனக்கு எதிரான கொச்சையான ட்வீட்டுக்கு லைக் போட்டுக்கொண்டு இருப்பதை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்.
இது குறித்து கட்சியில் சென்று பேசுவதற்கு முன்பாகவே என்னை இடைநீக்கம் செய்துவிட்டனர். என் தரப்பில் என்ன நடந்தது என்று கேட்க விசாரணையே வைக்கவில்லை” எனக் கூறினார்.