Skip to main content

“இந்த பட்ஜெட்டில் சமூக அடிப்படையில் பட்டியலின வஞ்சித்திருக்கிறார்கள்” - திருமாவளவன் கண்டனம்

Published on 02/02/2025 | Edited on 02/02/2025
Thirumavalavan condemns central budget

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார். இதையடுத்து, இரண்டாம் நாளான நேற்று (01-02-25) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டை, இல்லங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் திட்டம் நீட்டிப்பு,  5 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்க புதிய திட்டம் என்ற பல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென தனி அறிவிப்பும் எதுவும் வெளியிடவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி செய்வதற்காகவே பா.ஜ.க அரசு பயன்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதால் இந்திய ஒருமைப்பாடே சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் ஓர்வஞ்சனைப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தேசிய உணவுத் தொழில் நுட்ப நிறுவனம் ( என்.ஐ.எஃப்.டி ) அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் விளையும் மக்கானா பயிரை மேம்படுத்துவதற்காக வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பாட்னாவில் இருக்கும் ஐஐடி விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்காக ஒரு அறிவிப்புகூட இல்லை. இது அப்பட்டமான ஓரவஞ்சனை ஆகும். 

பொருளாதார வளர்ச்சியின் இரண்டாவது எஞ்சினாக நிதி அமைச்சரால் குறிப்பிடப்பட்டிருக்கும் சிறு குறு நடுத்தர தொழில்கள் துறைக்குப் பல அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்து லட்சம் எஸ்.சி/எஸ்.டி மகளிரைத் தொழில் முனைவோராக ஆக்குவோம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இந்தத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 22138 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் சுமார் ரூ. 5 ஆயிரம் கோடியைக் குறைத்து ரூ.17306 கோடிதான் செலவிடப்பட்டது. இந்த ஆண்டில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட 5% க்கும் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்காகக் கடந்த ஆண்டு ரூ. 6360 கோடி ஒதுக்கப்பட்டு, திருத்தப்பட்ட பட்ஜெட்டில் அதில் ரூ.760 கோடி குறைக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே ரூ. 6360 கோடி மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதிலும் எவ்வளவு தொகையை வெட்டிக் குறைப்பார்கள் என்பது தெரியவில்லை. 

தேசிய ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு வெறும் ரூ.130 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல மாநில அரசுகளே இதைவிட அதிகமான தொகையை ஒதுக்குகின்றன. எஸ்சி, எஸ்டி துணைத்திட்டங்களின் அடிப்படையில் பட்ஜெட்டில் எஸ் சி, எஸ்டி மக்களின் மக்கள் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் பாஜக அரசு அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகையில் பாதியைக் கூட ஒதுக்கிடவில்லை. சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வி படிப்பதற்கான ‘பிரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ தொகைக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.326.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதில் வெறும் ரூ.90 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. இந்த ஆண்டு அந்தத் திட்டத்துக்காக ரூ.195 .70 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். 

‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பிற்காகக்’ கடந்த ஆண்டு ரூ. 1145 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதில் ரூ. 344 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட ரூ. 700 கோடி ரூபாய் குறைத்து வெறும் ரூ.413.9 கோடி மட்டுமே ஒதுக்கி இருக்கின்றனர். சிறுபான்மை சமூகத்தினரின் கல்வியை அழித்தொழிக்க வேண்டும் என்று பாஜக அரசு செயல்படுவது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பழங்குடி மக்களுக்குத் தாங்கள் ஆதரவாக இருப்பது போல இந்த அரசு பகல் வேடம் போடுகிறது. கடந்தாண்டு பட்ஜெட்டில் பழங்குடியினர் நலத்துறைக்காக ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதில் ரூ.10,237 கோடி மட்டுமே செலவிடப்பட்டது . பழங்குடி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்காகக் கடந்த ஆண்டு ரூ. 2432 கோடி ஒதுக்கினார்கள். இந்த ஆண்டு ரூ.30 கோடி ரூபாய் மட்டுமே அதில் கூடுதலாக ஒதுக்கியுள்ளனர். இந்த பட்ஜெட்டில் சமூக அடிப்படையில் எஸ்சி, எஸ்டி மக்களையும்; சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களையும் வஞ்சித்திருக்கிறார்கள். மாநிலங்களை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருக்கிறார்கள். இந்த அணுகுமுறை சமூக ரீதியில் ஏற்றத்தாழ்வை வலுப்படுத்துவதாகவும்,  மாநில உரிமைகளை மறுப்பதாகவும் இருக்கிறது. இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாக உள்ளது. மொத்தத்தில், நிதி ஒதுக்காமல் வெற்று அறிவிப்புகளைச் செய்திருக்கும் இந்த பட்ஜெட், மக்களுக்கிடையேயும் மாநிலங்களுக்கிடையேயும் பாகுபாடுகளை உருவாக்கும் பிரிவினைவாதப் போக்கைக் கொண்டதாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்