அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அக்டோபர் 17 ம் தேதி அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த இந்த தேர்தலில் பதியப்பட்ட வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு நேற்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
அதில் மல்லிகார்ஜுன் கார்கே 7897 வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் சுமார் 1000 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறினார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி “கார்கேயின் அனுபவமும் அறிவும் ராகுலின் உழைப்பும் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும்” என கூறியுள்ளார்.
அப்போது பேசிய அவர், “கார்கே அவர்கள் வெற்றிகளை மட்டுமே கண்டவர். அந்த வெற்றிகளை உழைப்பின் மூலமாக கண்டவர். இன்றைக்கு கடுமையாக உழைப்பதற்கு ராகுல் காந்தி இருக்கிறார். கார்கேயின் அனுபவமும் அறிவும் ராகுலின் உழைப்பும் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும். நான் சொன்னது எல்லாமே நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தான். அதிக ஓட்டு வித்தியாசத்தில் கார்கே வெற்றி பெறுவார் என்பது நான் அறிந்தது தான். இது அவரது அனுபவத்திற்கு கிடைத்த வாக்குகள்.
கார்கே பல உயர்வுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்தவர். கர்நாடகாவில் முதலமைச்சர் பொறுப்பிற்காக வாய்ப்பை எதிர்பார்த்து நின்றார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இருந்தும் கார்கே யார் மீதும் குற்றம் சொல்லவில்லை, ஒதுங்கி இருக்கவில்லை, தலைமைக்கு எதிராக பேசவில்லை. தன் கடமைகளை மீண்டும் பார்த்தார். இது தான் அனுபவம். அந்த அனுபவம் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும்” எனக் கூறினார்.