நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிரான 2 நாள் நடைபயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று துவங்கினார். இந்த நடைபயணம் வானதிராயபுரம் என்ற இடத்தில் இருந்து துவங்கியது.
என்.எல்.சி இந்தியா நிறுவனத்திற்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தக்கூடாது; சுற்றுச்சூழல், நீர்வளம், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை அழிக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
வானதிராயபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “45 கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை என்.எல்.சி வாங்கப் போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இது இப்பகுதி பிரச்சனை மட்டும் அல்ல. இந்த மாவட்டம் சார்ந்த பிரச்சனை. என்.எல்.சி நிறுவனம் இங்கு வந்த 66 ஆண்டுகளுக்கு முன்பு நமது மக்கள் கிட்டத்தட்ட 37 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு இன்றுவரை பட்டா கிடைக்கவில்லை. இன்றுவரை அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
நிலம் கொடுத்த குடும்பங்களில் இன்றுவரை யாரும் வேலையில் இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை என்.எல்.சி நிறுவனம் ஏமாற்றிக்கொண்டு உள்ளது. ஆனாலும் இந்தப் பிரச்சனையை இன்னும் கொஞ்சம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு நான் ஓட்டுக்காக வரவில்லை. அரசியலுக்காகவும் வரவில்லை. இது தேர்தல் பிரச்சனை அல்ல. இது நமது மண்ணின் பிரச்சனை. 60 ஆண்டுகளுக்கு முன் 10 அடியில் இருந்த தண்ணீர் இன்று ஆயிரம் அடிக்குச் சென்றுவிட்டது. காரணம் இந்த மிகப்பெரிய வில்லன் என்.எல்.சி.
அன்னூரில் உள்ள விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தக்கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு போய் போராடுகிறார். எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அங்கு போய் போராடுகின்றனர். மற்ற கட்சிகளும் நேரடியாக அங்கு சென்று போராடுகிறார்கள். இங்கு 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள். இங்கு வந்து யாராவது போராடுகிறீர்களா. இதற்கு யாராவது குரல் கொடுத்தீர்களா.” என்று பேசினார்.