Skip to main content

தேனியில் பண மழை பொழிந்தது: தங்க தமிழ்ச்செல்வன் 

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

 

 

அமமுக கொள்கைப்பரப்புச் செயலாளரும், தேனி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது, எல்லா கட்சித் தலைவர்களும் தேனி பாராளுமன்றத் தொகுதியில் நடந்ததை சொல்லியிருக்கிறார்கள். பண மழை பொழிந்தது தேனி பாராளுமன்றத் தொகுதியில்தான். 500 கோடி அந்த தொகுதிக்கு செலவு செய்திருக்கிறார். வீடியோ ஆதாரம் இருக்கிறது. அதனை வைத்து என்ன செய்வது. நடவடிக்கை எடுப்பார்களா? 

 

thanga tamil selvan



இப்போது என்ன சொல்லுகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் போய் நீ எனக்கு ஓட்டு போடவில்லை. கொடுத்த இரண்டாயிரத்தை திருப்பிக்கொடு என்று மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். மல்லுக்கட்டி வீட்டுக்கு வீடு பிரச்சனையாகிக்கொண்டிருக்கிறது. அதுவும் வீடியோ இருக்கிறது. 

 

தேர்தல் முடிந்து விட்டது. ஸ்டாக் ரூமில் போய் அதிகாரிகள் நுழைவது, பார்வையிடுவது, செக் பண்ணுவதை பார்த்தால் எங்களக்கு பயமாக இருக்கிறது. காரணம் இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஜெயிக்கப்போவது இல்லை. அமமுகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி. மதுரையில் ஒரு ஏஆர்ஓ அத்துமீறி எதற்காக அந்த அறைக்கு போனார்கள். அதற்கு காரணம் என்ன. இதனை மாவட்ட ஆட்சியர், தேர்தல் ஆணையம் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 

 

உள்ளே நுழைந்த அதிகாரியிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்டிருக்கலாம். எதற்காக போனீர்கள். என்ன காரணம் என்று கேட்டிருக்கலாம். அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். என்ன காரணம் சொல்லி சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஓட்டு மிஷின் உள்ள அறையில் ஒவ்வொரு கட்சி சார்பாக ஏஜெண்ட் போடுவோம். இரவு 10 மணி வரைக்கும்தான் அனுமதிக்கிறார்கள். அதற்கு மேல் அனுமதிப்பதில்லை. 10 மணிக்கு மேல்தான் அனுமதிக்க வேண்டும்.  

 

ஸ்டாக் ரூமும், ஸ்டோரேஜ் ரூமும் பக்கத்து பக்கத்தில் இருக்கிறது. அங்கு ஏன் போகிறீர்கள். எல்லா வேலையும் முடிந்து சீல் வைத்துவிட்டார்கள். ஸ்டோரேஜ் ரூமுக்குள் செல்வதன் அவசியம் என்ன. கடந்த தேர்தலில்கூட இரவு நேரத்தில் எங்க ஏஜெண்ட் காவலுக்கு இருந்துள்ளார்கள். இந்த தடவை அனுமதிக்காததன் காரணம் என்ன? தேனி பாராளுமன்ற தொகுதியில் இரவு 10 மணிக்கு மேல் ஏஜெண்ட்டை அனுமதிக்கவில்லை. அனுமதிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. 

 

அதிமுக கூட்டணியினர் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம் எல்லா கட்சிகளுக்கும் இருக்கிறது. மூன்றடுக்கு, நான்கு அடுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அதையும் மீறி வாக்கு பெட்டி உள்ள பகுதிக்கு ஒரு அதிகாரி நுழைகிறார். நாளைக்கு ரிசல்ட் என்றால் கூட எங்களுக்கு பிரச்சனை இல்லை. இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. அதனால் எங்களுக்கு பயம் இருக்கிறது. இந்த ஒரு மாதத்திற்கு எங்க ஏஜெண்ட்டை 24 மணி நேரமும் தங்க வைக்க வேண்டும். அதற்காக அனுமதி வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்