தமிழ் சினிமா நடிகரான விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான், அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, த.வெ.க-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்று (19-02-24) நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
இந்த நிலையில், அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் உட்ப்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று (19-02-24) நடைபெற்றது. ஆனால், அந்த கிராமங்களில் கொடியேற்றுவதற்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையிடம் உரிய அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு சென்று, அனுமதியின்றி வைக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கொடிக் கம்பத்தை அகற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அனுமதியின்றி கொடி கம்பத்தை ஏற்றிய புகாரில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.