கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே மாதத்துடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி இந்த முறை கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்து அக்கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய தலைமை அறிவித்தது. அதில், கர்நாடக கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்லக் கூடாது என்று கூறி சர்ச்சையைக் கிளப்பிய உடுப்பி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரகுபதி பட்டிற்கு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சீட் மறுக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கட்சிக்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். இன்று பா.ஜ.க. நன்றாக வளர்ந்துவிட்டது. எனவே இனி நான் அவர்களுக்கு தேவைப்படவில்லை. கட்சியின் முடிவு மிகுந்த வலியை ஏற்படுத்தியிருக்கிறது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.