ஆந்திர மாநிலத்திற்கு சென்றிருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு, தெலுங்கு தேசம் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரமாநில சட்டசபைத் தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்ட பா.ஜ.க., அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய பா.ஜ.க. அரசு, பட்ஜெட்டிலும் ஆந்திர மாநிலத்திற்கு குறைவான தொகையையே ஒதுக்கியது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கத் தவறிய மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நாடாளுமன்றத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அறிவித்து பரபரப்பு கிளப்பினார். அதைத் தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் மோடி குறித்து அவர் நேரடியாக விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஆந்திர மாநிலம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக, பா.ஜ.க தேசிய தலைவர் இன்று காலை சென்றிருந்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் அமித்ஷாவை நோக்கி கறுப்புக்கொடியைக் காட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும், அமித்ஷா வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற பா.ஜ.க.வினர் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.