சென்னை கிண்டி பகுதியில் இருக்கும் ஹில்டன் ஓட்டலில் நடந்த இந்தக் கூட்டத்தில், முக்கிய தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டிருக்கு. குறிப்பா தி.மு.க இளைஞரணி யில் உறுப்பினராகும் வயது வரம்பு 15-ல் இருந்து 30 வரைன்னு இருந்ததை, இப்ப 18-ல் இருந்து 35 வரைன்னு மாத்தி இருக்காங்க. அதேபோல் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் உறுப் பினர்கள் வீதம், மொத்தம் 30 லட்சம் புதிய உறுப்பினர்களை 2 மாதத்திற்குள் சேர்க்கணும்னு முடிவெடுத்திருக்காங்க. இளைஞரணிச் செயலாளரா ஸ்டாலின் இருந்தப்பவும் சரி, வெள்ளக்கோயில் சாமிநாதன் இருந்தப்பவும் சரி, உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக்கணும்னு அவங்க களமிறங்குனப்ப, 5 லட்சம் உறுப்பினர் வரை சேர்த்த மாவட்டமும் உண்டு. வெறும் நூறுக்கும் குறைவான உறுப்பினர்களைச் சேர்த்த மாவட்டமும் உண்டு. அதையெல்லாம் இப்ப முறைப்படுத்த வேண்டியிருக்கு.
அதேபோல் தமிழகத்தின் வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கணும்னும் தீர்மானம் இதில் நிறைவேற்றப்பட்டிருக்கு. இதை நடைமுறைப்படுத்தணும்னா மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தால் மட்டும் போதாது, மத்தியிலும் ஆட்சியில் பங்கெடுத்தால்தான் உண்டுங்கிற கருத்தும் அங்கே எதிரொலிச்சிது. அதே போல் 15 வயதில் இருக்கும் பள்ளி மாணவர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை எதிர் முகாம் அரசியல் கட்சிகள் ஈர்த்து வருவதை தி.மு.க. இளைஞரணி எப்படி சமாளிக்கலாம் என்றும் திட்டம் போட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, மாணவர்களை திராவிடச் சிந்தனைகளுக்கு எதிராக சில அமைப்புகள் மாற்றிக்கிட்டிருக்கு. அப்படிப் பட்டவர்களைப் பற்றி இளைஞரணியினர் யோசிக்கணும்.
அதேபோல் இந்தக் கூட்டத்தில், உதயநிதியின் மாநில டூர் பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கு. மண்டல வாரிய இளைஞரணி மாநாட்டை நடத்திவிட்டு நிறைவாக மாநில இளைஞரணி மாநாட்டை நடத்துறதுன்னும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கு. உதயநிதியின் வேகமான செயல்பாடுகள், இளைஞரணியினரை ரொம்பவே உற்சாகப்படுத்தி இருக்கு. கட்சிக்குன்னு ஒரு தகவல் தொழில்நுட்ப அணி இருந்தாலும், அன்றாட அரசியலை விவாதிக்கவும், எதிர் முகாமினருக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கவும் இளைஞரணியிலும் ஒரு குழு அமைக்கணும்ங்கிற எண்ணமும் அவர்கள் மத்தியில் வலுத்திருக்கு. இதனால் இளைஞரணி இன்னும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.