எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் எடப்பாடி தரப்பு உற்சாகமாக உள்ளது. மறுபுறம் ஓபிஎஸ் தரப்பு நாளை திருச்சியில் பிரமாண்ட மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
கர்நாடகாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் தனது தரப்பு வேட்பாளரை எடப்பாடி அணி அறிவித்தது. அதே நேரம் ஓபிஎஸ் தரப்பிலும் மூன்று வேட்பாளர்கள் கர்நாடகாவின் மூன்று தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில் இரண்டு வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டது. கோலார் தங்க வயல் தொகுதியில் அனந்த்ராஜ் மற்றும் காந்தி நகர் தொகுதியில் கே.குமார் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், புலிகேசி நகரில் வேட்புமனுத் தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டது.
ஓபிஎஸ் சார்பில் அவரது தரப்பு வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டதை நிராகரிக்க வேண்டும் என அதிமுக எடப்பாடி தரப்பு புகாரளித்தது. கர்நாடகாவின் காந்தி நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த வேட்பாளர் மனு ஏற்கப்பட்டதை நிராகரிக்க வேண்டும் என காந்தி நகர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் கர்நாடகா அதிமுக மாநிலச் செயலாளர் எஸ்.டி.குமார் புகார் அளித்தார். கட்சியின் அங்கீகாரம் இல்லாத வேட்பாளர்கள் அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது சட்ட விரோதம். எனவே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இபிஎஸ் தரப்பினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தரப்பு அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். நோட்டீஸ் வழங்கப்பட்டதை அடுத்து, இரட்டை இலை சின்னமும் கிடைக்காத நிலையில் கோலார் தங்க வயல் தொகுதியில் அனந்த்ராஜ் மற்றும் காந்தி நகர் தொகுதியில் கே.குமார் என 2 வேட்பாளர்களும் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த புகழேந்தி அறிவித்துள்ளார். கர்நாடகத் தேர்தலில் வேட்புமனுவை வாபஸ் பெற நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.