அண்ணாமலை Vs பொன்னார்.. அண்ணாமலை Vs நயினார் நாகேந்திரன்... இந்த உரசலில் புதிதாக இணைந்துள்ளவர் வானதி சீனிவாசன். ஆம்.. அண்ணாமலை VS சீனிவாசனுக்கு இடையேயான முட்டல் மோதல் தற்போது பொதுவெளியில் கசியத் தொடங்கியுள்ளதுதான் கமலாலயத்தின் சூடான அப்டேட்.
தமிழ்நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலை பற்றிய இமேஜ், டெல்லித் தலைமையிடம் முற்றிலுமாக சரிந்துவிட்டது எனக் கூறப்படுகிறது. காரணம், கட்சியின் சீனியர்கள் அண்ணாமலையின் வார் ரூம் அரசியல் குறித்தும், கிரிமினல்களுடன் அவர் வைத்திருக்கும் நெருக்கம் குறித்தும், வசூல் விவகாரங்கள் குறித்தும், புகார்களை திரட்டி டெல்லியில் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், தமிழக பாஜக தலைமை மீது எரிச்சலான டெல்லி தலைமை, அண்ணாமலைக்கு எதிரான மனநிலையில் இருக்கும் வானதி சீனிவாசனுக்கு, ‘நீங்க தனியா ஆரம்பிக்கலாம்’னு சிக்னல் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, மறைமுகமாக அண்ணாமலையை எதிர்த்துவந்த வானதி, இப்போது பகிரங்கமாகவே மோத ஆரம்பித்துவிட்டார். அண்ணாமலை ஏப்ரல் மாதம் பாதயாத்திரை அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு முன்பே வானதி, பழனிக்கு யாத்திரை போக தொடங்கினார். கடந்த 30-ஆம் தேதி, கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து யாத்திரையைத் தொடங்கிய அவர், பொள்ளாச்சி, உடுமலை வழியாக நடந்து வந்து, பழனியை வந்தடைந்த வானதி, தற்போது யாத்திரையை நிறைவும் செய்துவிட்டார்.
யாருக்கு எதிராக அரசியல் செய்ய இந்த யாத்திரையை வானதி திட்டமிட்டாரோ, அந்த அண்ணாமலையை வைத்தே இந்த யாத்திரையை தொடங்கியது தான் ஹைலைட் என கமலாலயவாசிகள் காதைக் கடித்தனர். இந்த முட்டல் மோதல் இப்போது தொடங்கவில்லை என்றும் இது கோவை கார் சிலிண்டர் விபத்தின் போதே வெடிக்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் கூறினர். கோவை கார் சிலிண்டர் விபத்தின்போது, கோவை பாஜகவினர் பந்த் போராட்டத்தை அறிவித்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாஜக மாநில தலைமையை கலந்து ஆலோசிக்காமல் கோவை பாஜகவினர் தன்னிச்சையாக பந்த் போராட்டத்தை அறிவித்துவிட்டனர் என நீதிமன்றத்திலேயே அண்ணாமலை கூறியிருந்தார். இது கோவை பாஜகவினரை மிகவும் கடுமையாக எரிச்சலடையச் செய்தது. அப்போதிலிருந்தே, அண்ணாமலையின் மீது அதிருப்தியில் இருக்கும் கோவை பாஜகவின் ஒரு பிரிவினர், தன்னிச்சையாக செயல்பட முயல்வதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தன. இதன் நீட்சியாகத்தான் வானதியின் பாதயாத்திரை பார்க்கப்படுகிறது.
ஆனால், தன்னை வைத்தே தனக்கு எதிராக மைலேஜ் தேடுவதாக நினைத்த அண்ணாமலை, வானதிக்கு செக் வைக்கவும் தவறவில்லை என்கின்றனர் பாஜகவினர். ஆம், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான கோவை பாஜக தலைவர் உத்தம ராமசாமி வானதிக்கு போட்டியாக மருதமலைக்கு யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். இது வானதி தரப்புக்கு சறுக்கலாக பார்க்கப்படுகிறது. எங்கே மீடியா வெளிச்சமும் டெல்லியின் பார்வையும் தங்களை தாண்டி உத்தம ராமசாமி மீது பட்டுவிடுமோ என்பதில் வானதி தரப்பினர் கவலையாக இருக்கின்றனர்.
தமிழ்நாடு பாஜகவின் அதிகரிக்கும் கோஷ்டிபூசல் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக வெளியாகி வருவது, அக்கட்சியினரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.