“அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனும் திட்டத்தை அறிவித்து முதலமைச்சர் சென்றுகொண்டுள்ளார். இது பாசிசம் பேசுகிறவர்களுக்கு பதட்டமாக இருக்கும். அதனால் தான் முதலமைச்சரை எதிரியாகப் பார்க்கிறார்கள்” என அமைச்சர் மனோதங்கராஜ் கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடகாவில் பாஜக அரசு கண்ணியமில்லாமல் இருந்ததால் தான் தூக்கி வீசப்படும் நிலையில் உள்ளது. பாஜகவின் யோக்கியம் அனைத்து மக்களுக்கும் தெரியும். வடமாநிலங்களில் சட்டம் ஒழுங்கு எப்படி சீர் குலைந்துள்ளது, லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, விலைவாசி எப்படி கட்டுக்கடங்காமல் செல்கிறது. அனைத்திலும் ஒரு சார்பு தன்மையுடன் இருக்கும் பிரதிநிதி இதைப் பற்றி பேசவே கூடாது.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தமிழ்நாட்டில் திமுக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டு அரசை முதலமைச்சர் ஸ்டாலினை ஒரு சவாலாகப் பார்க்கிறார்கள். பாசிசம், நாசிசம் என்று அவர்கள் சென்று கொண்டிருக்கக்கூடிய நேரத்தில் சோசியலிசத்தையும் சமூக நீதியையும் பேசும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தென்மாநிலங்களில் அவர்களது பிடி இன்னும் சறுக்கிக் கொண்டு செல்கிறது. உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. சுட்டுக்கொல்லப்படுகிறார். அதைப் பார்த்த நாட்டு மக்கள் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
பாஜக திமுகவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவரது குடும்பத்தாரையும் குறிவைப்பதாகச் சொல்கிறார்கள். அவரை யாரும் குறி வைக்க முடியாது. மு.க.ஸ்டாலின் தற்போது இந்தியாவில் உள்ள தலைவர்களில் கொள்கை ரீதியாக அரசியலை முன்னெடுக்கக்கூடியவர். எனவே தான் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனும் திட்டத்தை அறிவித்து சென்றுகொண்டுள்ளார். இது பாசிசம் பேசுகிறவர்களுக்கு பதட்டமாக இருக்கும். அதனால் தான் முதலமைச்சரை எதிரியாகப் பார்க்கிறார்கள்” எனக் கூறினார்.