நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “கோவையின் ஆற்றலும், நீலகிரியின் அழகும் மேட்டுப்பாளையத்திற்கு உண்டு. நீலகிரி தேயிலைக்கு பிரபலமான இடத்துடன் டீ விற்பவருக்கு எப்படி தொடர்பு இல்லாமல் இருக்கும். தமிழகம் முழுவதும் பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை இன்று பார்க்கிறேன். பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மட்டுமே திமுக விடைபெறும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். திமுக, காங்கிரஸ் போன்ற குடும்பக் கட்சிகளுக்கு ஒரே அஜெண்டா மட்டுமே உள்ளது. பொய் சொல்லி ஆட்சியைப் பிடிப்பது. காங்கிரஸ் பல தசாப்தங்களாக வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தைக் கொடுத்தது. ஆனால் வறுமை ஒழிக்கப்படவில்லை.
ஆனால், இருபத்தைந்து கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இது. குடும்பக் கட்சிகள் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களைத் தவிர, எந்த ஏழையும் பழங்குடியினரும் உயர் பதவியில் இருக்க முடியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் முதன்முறையாக பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக்கியது பா.ஜ.க.. அந்த நேரத்திலும் இந்தியா கூட்டணியினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல தசாப்தங்களாக, காங்கிரஸ் மற்றும் திமுக இந்திய கூட்டணி, பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் (SC - ST - OBC) உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களை வீடு, தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்காக ஏங்க வைத்தது. ஏனென்றால் அனைவருக்கும் வீடு மற்றும் மின்சாரம் கிடைக்காது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் பாஜக அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கியது. ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் கொண்டு வந்தது, 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கியது. இவர்களில் பெரும்பாலானோர் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பு சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தியா கூட்டணி இந்தியாவின் பலத்தை நம்பவில்லை. உலகளவில் பெரிய அளவில் கொரோனா தொற்று வந்தது. இந்தியாவால் தடுப்பூசி தயாரிக்க முடியாது என்று இந்தியா கூட்டணியினர் கூறினார்கள். இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்போம் என்று கூறினோம். இந்தியாவில் தயாரிப்போம் ( make in india) என்ற திட்டத்தின் கீழ் தடுப்பூசியை இந்தியா தயாரித்தது. இது மட்டுமின்றி, இலவச தடுப்பூசிகளை வழங்கி கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களில் பாகுபாடு காட்டப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ‘சப்கா சத், சப்கா விகாஸ்’ என்ற தொலைநோக்கு பார்வையில் செயல்படுகிறது. வளர்ந்த இந்தியாவுக்காக வளர்ந்த தமிழ்நாடு என்கிறோம். அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம்.
திமுக எப்போதுமே வெறுப்பு அரசியலை செய்து வருகிறது. திமுகவின் கவனம் தமிழகத்தின் வளர்ச்சியில் இருந்ததில்லை. ஆனால், மூன்றாவது முறையாக அமையவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நீலகிரியின் வளர்ச்சிக்காக இன்னும் தீவிரமாக பாடுபடும் என்று உறுதியளிக்கிறேன், இது மோடியின் உத்தரவாதம்” எனத் தெரிவித்தார்.