பீகார் மாநிலம் அராரியா நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் சர்ஃபராஜ் அலாம் வெற்றிபெற்றார். இந்த வெற்றி அம்மாநிலத்தை ஆளும் நிதீஷ்குமார் அரசு மற்றும் கூட்டணிக்கட்சியான பா.ஜ.க.வுக்கு பேரிடியாக இருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் கிரிராஜ் சிங், ‘அராரியா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றிபெற்றது பீகாருக்கு மட்டுமல்ல, தேசத்திற்கே மிகப்பெரிய ஆபத்து. அந்தத் தொகுதி இனி தீவிரவாதத்தின் மையமாக மாறும்’ என கூறியிருந்தார். அராரியா தொகுதி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதி என்பதையும், மீண்டும் அங்கு ஒரு இஸ்லாமியர் வெற்றிபெற்றுள்ளார் என்பதையும் அவர் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், பீகார் மாநில துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, ‘ஆர்.ஜே.டி. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள இரண்டு தொகுதிகளில் அதிக வெற்றி பெற்றதன் மூலம் 1.30 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றது. அதுதான் அராரியா வெற்றிக்குக் காரணம்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
RJD got a lead of 1 Lakh 30 Thousand votes from 2 Minority dominated constituency which led to their victory in Araria.
— Sushil Kumar Modi (@SushilModi) March 14, 2018
பா.ஜ.க. தலைவர்களின் இந்தக்கருத்து குறித்து பேசியுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித்தலைவர் லாலு பிரசாத் யாதவ்வின் மனைவி ராப்ரி தேவி, ‘அராரியா தொகுதி மக்கள் 2019ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்டவேண்டும். அவர்கள் என்ன தீவிரவாதிகளா?’ என கேள்வியெழுப்பியுள்ளார்.