கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் முடிந்த அளவு நிதி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்து இருந்தார். இதற்குத் தனிப்பெரு முதலாளிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தைத் தாரைவார்த்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பதா? என்று ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனையடுத்து தற்போது மக்கள் அடுப்பில் நெருப்பேற்ற வழியில்லாது நிற்கையில் விளக்கில் நெருப்பேற்றச் சொன்ன வெற்றுச்சடங்கால் விளைந்த நன்மை யாது? 80 கோடி மக்களே அரசிடம் உதவியை எதிர்பார்த்து நிற்கையில் அவர்களிடமே போய் நிதிகேட்டு நிற்பது என்ன மாதிரியான நிர்வாகச் செயல்பாடு? என்ற அடுக்கடுக்கான கேள்விகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இந்த நிலையில் சீமானின் கருத்துக்கு பதில் கூறும் வகையில் பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், விஜயலட்சுமி கேட்ட ஒரு கேள்விக்குக் கூட பதில் சொல்லாமலே ஒடி ஒளிந்து கொண்டு உலகமே புகழும் நம் தேசத்தலைவனை கேள்வி கேட்க அருகதை கிடையாது. ஓ இதுதான் திராவிட அரசியலோ என்றும், நம் தேசத்தை மதிப்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் RSS தான் என்றும் கூறியுள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.